செய்திகள்
கங்கை நதி

கங்கையில் மிதந்து வந்த சடலங்கள்... கொரோனா அபாயத்தை தடுக்க அதிகாரிகள் செய்த செயல்

Published On 2021-05-12 11:29 GMT   |   Update On 2021-05-12 11:29 GMT
விறகுகள் வாங்க முடியாத நிலை, தகன மேடைகள் கிடைக்காத நிலை போன்ற காரணங்களால் சடலங்களை உறவினர்கள் ஆற்றில் போட்டிருக்கலாம் என அதிகாரிகள் சந்தேகிக்கின்றனர்.
புதுடெல்லி:

இந்தியாவில் கொரோனா வைரசின் 2ம் அலை கடுமையான பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. தற்போது தினசரி தொற்று எண்ணிக்கை குறைந்து வருவது ஆறுதல் அளித்தாலும், உயிரிழப்புகள் அதிகமாக உள்ளன. இந்நிலையில் பீகாரின் பக்ஸர் மாவட்டத்தில் உள்ள சவுஸா நகரில் பாயும் கங்கை நதியில் 71 சடலங்கள் மிதந்து வந்தது கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. 

இந்த சடலங்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டு இறந்தவர்களின் உடல்களாக இருக்கலாம் என்ற சந்தேகம் எழுந்தது. இதையடுத்து அந்த உடல்களின் மாதிரிகள் சேகரிக்கப்பட்டு ஆய்வுக்கு அனுப்பப்பட்டன. அதன்பின்னர் உடல்கள் புதைக்கப்பட்டன. 

உத்தரப் பிரதேசத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தவர்களின் உடல்களாக இருக்கலாம் என்ற சந்தேகம் எழுந்துள்ளது. இந்து சம்பிரதாயப்படி சடலங்களை எரிப்பதற்கு தேவையான விறகுகள் வாங்க முடியாத நிலை உள்ளது. சுடுகாடுகளில் அதிக அளவிலான இறுதிச்சடங்கு நடப்பதால் தகன மேடைகள் கிடைக்காத நிலை உள்ளது. இதுபோன்ற காரணங்களால் சடலங்களை உறவினர்கள் ஆற்றில் போட்டிருக்கலாம் என அதிகாரிகள் சந்தேகிக்கின்றனர். உடல்கள் ஆற்றில் வீசப்படுவதால் கொரோனா பரவல் மேலும் அதிகரிக்க வழிவகுக்கும் என்ற கவலையும் எழுந்துள்ளது. 

எனவே, பீகாருக்குள் சடலங்கள் வந்துவிடாதபடி ஆற்றில் வலுவான வலையை அமைத்துள்ளனர். இதன்மூலம், உத்தர பிரதேசத்தில் இருந்து ஆற்றில் உடல்கள் மிதந்து வந்தால், எல்லையிலேயே தடுக்கப்பட்டு உடல்கள் அப்புறப்படுத்தப்படும். மாநில எல்லையில் ஆற்றின் குறுக்கே வலை கட்டியிருப்பதாகவும், ரோந்துப் பணியை தீவிரப்படுத்தியிருப்பதாகவும் பீகார் நீர்வளத்துறை அமைச்சர் சஞ்சய் குமார் இன்று டுவிட்டரில் கூறி உள்ளார்.

கொரோனா துயரம் மற்றும் கங்கை நதியை அசுத்தமாக்கும் செயல் ஆகியவற்றால் மாநில அரசு வேதனையடைந்துள்ளது. ஆற்றில் இருந்து மீட்கப்பட்ட உடல்கள் அனைத்தும் இறந்து நான்கு முதல் ஐந்து நாட்கள் வரை ஆன உடல்கள் என்பது பிரேத பரிசோதனை அறிக்கையில் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது என்றும் அமைச்சர் கூறினார்.
Tags:    

Similar News