செய்திகள்
மருத்துவ உபகரணங்கள்

எகிப்தில் இருந்து 3 விமானங்களில் இந்தியாவிற்கு மருத்துவ உபகரணங்கள் அனுப்பி வைப்பு

Published On 2021-05-11 08:24 GMT   |   Update On 2021-05-11 08:24 GMT
இந்தியாவின் நட்பு நாடுகளில் ஒன்றான எகிப்தில் இருந்து வந்துள்ள இந்த உதவி மிகவும் மதிப்பு வாய்ந்தது என இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
புதுடெல்லி:

இந்தியாவில் கொரோனா தொற்றின் 2வது அலை மிகத் தீவிரமாக பரவி வருகிறது. இதன் காரணமாக தினசரி கொரோனா பாதிப்பு எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், பல மருத்துவமனைகளில் நோயாளிகளுக்குத் தேவையான ஆக்சிஜன், ரெம்டெசிவிர் மருந்துகள் உள்ளிட்ட மருத்துவ உபகரணங்களுக்கு கடும் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது.

இதனை சரி செய்ய அரசு சார்பில் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வரும் நிலையில், வெளிநாடுகளில் இருந்து ஆக்சிஜன் சிலிண்டர்கள் உள்ளிட்ட கொரோனா சிகிச்சைக்குத் தேவையான மருத்துவ உபகரணங்கள் சரக்கு விமானங்கள் மூலமாக அனுப்பி வைக்கப்படுகின்றன. அமெரிக்கா, இங்கிலாந்து, கனடா உள்ளிட்ட 40-க்கும் மேற்பட்ட நாடுகள் இந்தியாவிற்கு மருத்துவ உபகரணங்கள் வழங்கி உதவி செய்து வருகின்றன.



அந்த வகையில் எகிப்து நாட்டில் இருந்து 8,000 ரெம்டெசிவிர் மருந்து குப்பிகள், 300 ஆக்சிஜன் சிலிண்டர்கள், 50 ஆக்சிஜன் செறிவூட்டிகள் மற்றும் 20 வெண்டிலேட்டர்கள் ஆகியவை 3 விமானங்களில் இந்தியாவிற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. இந்தியாவின் நட்பு நாடுகளில் ஒன்றான எகிப்தில் இருந்து வந்துள்ள இந்த உதவி மிகவும் மதிப்பு வாய்ந்தது என இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
Tags:    

Similar News