செய்திகள்
முதல் மந்திரி பினராயி விஜயன்

வெளிமாநிலங்களில் இருந்து கேரளா வருவோருக்கு 14 நாள் வீட்டு தனிமை- பினராயி விஜயன் நடவடிக்கை

Published On 2021-05-08 10:09 GMT   |   Update On 2021-05-08 10:09 GMT
கேரளாவில் கொரோனாவுக்கு சிகிச்சைபெறுவோர் எண்ணிக்கை 4 லட்சத்தை தாண்டிவிட்டது. எனவே மாநிலம் முழுவதும் முழு ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டு உள்ளது என்று முதல் மந்திரி பினராயி விஜயன் கூறியுள்ளார்.

திருவனந்தபுரம்:

கேரளாவில் நாளுக்கு நாள் கொரோனா 2-வது அலையின் தாக்கம் அதிகரித்து வருகிறது. கொரோனா பரவலை கட்டுப்படுத்த கேரளா முழுவதும் இன்று முதல் 16-ந் தேதி வரை முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு உள்ளது. அதன்படி அத்தியாவசிய தேவைகளுக்காக மட்டும் மக்கள் வீட்டை விட்டு வெளியே வரலாம்.

அதேநேரம் முழு ஊரடங்கை மீறுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அரசு எச்சரித்து உள்ளது. இது குறித்து மாநில முதல் மந்திரி பினராயி விஜயன் கூறியதாவது:-

கேரளாவில் கொரோனாவுக்கு சிகிச்சைபெறுவோர் எண்ணிக்கை 4 லட்சத்தை தாண்டிவிட்டது.எனவே மாநிலம் முழுவதும் முழு ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டு உள்ளது. வங்கிகள் ஒருநாள் விட்டு ஒரு நாள் செயல்படும்.


வெளிமாநில தொழிலாளர்கள் அவர்கள் பணிபுரியும் இடங்களிலேயே தங்கியிருக்க வேண்டும். அவர்களுக்கு ஒப்பந்ததாரரே உணவு அளிக்க ஏற்பாடுகள் செய்ய வேண்டும்.

கேரளாவில் கொரோனா பாதிப்பு காரணமாக யாரும் பட்டினி கிடக்க கூடாது என்பது அரசின் நிலைப்பாடு. இதற்காகவே அரசு பொதுமக்களுக்கு ரேசன் கடைகள் மூலம் இலவச உணவு பொருள்களை வினியோகித்து வருகிறது.

இந்த மாதமும் அனைத்து ரேசன்கார்டு தாரர்களுக்கும் உணவு பொருள்கள் வழங்கப்படும். வெளிமாநில தொழிலாளர்களுக்கும் இலவச உணவு பொருள் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது.

வாகன ஒர்க்ஷாப்புகள் வார இறுதியில் 2 நாட்கள் மட்டும் திறக்க அனுமதிக்கப்பட்டு உள்ளது. வெளிமாநிலங்களில் இருந்து கேரளாவுக்கு வருவோர் அரசின் கோவிட் 19 கேரள ஜாக்கிரதா இணையதளத்தில் பதிவு செய்ய வேண்டும்.

பதிவு செய்யாமல் கேரளாவுக்கு வருவோர் கட்டாயமாக 14 நாட்கள் வீட்டு தனிமையில் இருக்க வேண்டும். இதற்கான செலவுகளை அவர்களே செய்து கொள்ள வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

Similar News