செய்திகள்
கோப்புப்படம்

உத்தரபிரதேசத்தில் தனியார் ஆஸ்பத்திரியில் 5 கொரோனா நோயாளிகள் பலி

Published On 2021-04-22 19:16 GMT   |   Update On 2021-04-22 19:16 GMT
உத்தரபிரதேசத்தில் தனியார் ஆஸ்பத்திரி ஒன்றில் 5 கொரோனா நோயாளிகள் பலியானார்கள். ஆக்சிஜன் பற்றாக்குறையால் அவர்கள் இறந்ததாக கூறி, உறவினர்கள் ரகளையில் ஈடுபட்டனர்.
அலிகார்:

உத்தரபிரதேச மாநிலம் அலிகாரில் நவுரங்காபாத் பகுதியில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரியில் கொரோனா நோயாளிகள் பலர் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.அவர்களில் 5 பேர் நேற்று முன்தினம் திடீரென அடுத்தடுத்து உயிரிழந்தனர். 5 பேரும் வென்டிலேட்டர் உதவியுடன் சிகிச்சை பெற்று வந்தனர்.

எனவே, ஆக்சிஜன் பற்றாக்குறையால்தான் அவர்கள் இறந்து விட்டதாக அவர்களின் உறவினர்கள் குற்றம் சாட்டினர். ஆஸ்பத்திரி நிர்வாகம் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி ஆஸ்பத்திரி வளாகத்தி்ல் ரகளையில் ஈடுபட்டனர். உடனே போலீஸ் அதிகாரிகள் வரவழைக்கப்பட்டனர். அவர்கள் நிலைமையை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தனர்.

தனது சகோதரரை பறிகொடுத்த ஷியாம் காஷ்யப் என்பவர் கூறியதாவது:-

ஆக்சிஜன் பற்றாக்குறையால்தான் 5 பேரும் இறந்தனர் என்பதை மறைப்பதற்காகவே, ஆஸ்பத்திரி நிர்வாகம் அவசர அவசரமாக 40 ஆக்சிஜன் சிலிண்டர்களை வரவழைத்தது. ஆக்சிஜன் இருந்திருந்தால், ஏன் அவசரமாக வாங்க வேண்டும்?

இவ்வாறு அவர் கூறினார்.



ஆஸ்பத்திரி நிர்வாகம் சார்பில் அவசரமாக கேட்டதால், ஒரு மணி நேரத்தில் ஆக்சிஜன் சிலிண்டர்கள் அளிக்கப்பட்டதாக நகர நிர்வாகமும் உறுதிப்படுத்தி உள்ளது. இதுபற்றி விசாரணை நடந்து வருவதாகவும் தெரிவித்தது.

அதே சமயத்தில், 5 பேரும் இறந்தது தற்செயலான சம்பவம் என்று ஆஸ்பத்திரி உரிமையாளர் சஞ்சீவ் சர்மா தெரிவித்தார். போதிய ஆக்சிஜன் கையிருப்பில் இருப்பதாகவும் அவர் கூறினார்.
Tags:    

Similar News