செய்திகள்
கெஜ்ரிவால்

கூடுதல் ஆக்சிஜன் தேவையான நிலையில் வழக்கமான அளவு குறைப்பு: கெஜ்ரிவால் குற்றச்சாட்டு

Published On 2021-04-18 17:33 GMT   |   Update On 2021-04-18 17:33 GMT
ஒரே நேரத்தில் அதிகமான நோயாளிகள் வருவதால், மருத்துவமனையில் ஆக்சிஜன் தட்டுப்பாடு மிகப்பெரிய அளவில் ஏற்பட்டுள்ளது.
இந்தியாவில் 2-ம் அலை கொரோனா பாதிப்பு மிகப்பெரிய அளவில் இருக்கிறது. இந்திய அளவில் தினந்தோறும் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை 2 லட்சத்தை தாண்டியுள்ளது. மகாராஷ்டிரா, உத்தர பிரதேசம், டெல்லியில் அதிக பாதிப்பு உள்ளது.

கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களுக்கு முதலுதவியாக அளிப்பது ஆக்சிஜன்தான். மருத்துவமனைக்கு தினந்தோறும் ஆயிரக்கணக்கானோர் வருவதால், ஆக்சிஜன் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இதனால் பல நோயாளிகள் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.

இந்த நிலையில், கூடுதல் ஆக்சிஜன் தேவைப்படும்போது, வழக்கமான அளவை மத்திய அரசு குறைத்துள்ளது என்று அரவிந்த் கெஜ்ரிவால் குற்றம்சாட்டியுள்ளார்.

இதுகுறித்து டெல்லி மாநில முதல்வர் கெஜ்ரிவால், டுவிட்டர் பக்கத்தில் ‘‘டெல்லி கடுமையான ஆக்சிஜன் தட்டுப்பாட்டை எதிர்கொண்டுள்ளது. தற்போது கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை மிகத்தீவிரமாக அதிகரித்து வரும் நிலையில், வழக்கத்திற்கு மாறாக அதிக அளவில் ஆக்சிஜன் தேவைப்படுகிறது.

இந்த நேரத்தில் வினியோகத்தை அதிகரிக்கும் நிலையில், எங்களுடைய வழக்கமான வினியோகத்தை அதிக அளவில் குறைத்து, டெல்லி மாநிலத்திற்குரியதை, மற்ற மாநிலத்திற்கு மாற்றி விடுகின்றனர். ஆக்சிஜன் டெல்லிக்கு மிகவும் அவசரமாகியுள்ளது’’ எனத் தெரிவித்துள்ளார்.
Tags:    

Similar News