செய்திகள்
கேரள மந்திரி ஜலீல்

‘லோக்ஆயுக்தா’ உத்தரவு எதிரொலி - கேரள மந்திரி ஜலீல் ராஜினாமா

Published On 2021-04-14 02:23 GMT   |   Update On 2021-04-14 02:23 GMT
லோக்ஆயுக்தா உத்தரவை தொடர்ந்து கே.டி.ஜலீல் நேற்று தனது மந்திாி பதவியை ராஜினாமா செய்தார். தனது ராஜினாமா கடிதத்தை முதல்-மந்திரி பினராயி விஜயனுக்கு அவர் அனுப்பி வைத்தார்.
திருவனந்தபுரம்:

லோக்ஆயுக்தா விசாரணையில் குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டதால், கேரள மந்திரி கே.டி.ஜலீல் ராஜினாமா செய்தார்.

கேரள மாநிலத்தில் நடந்து வரும் இடதுசாரி கூட்டணி ஆட்சியில் உயர்கல்வித்துறை மந்திரியாக இருந்து வந்தவர் கே.டி.ஜலீல்.

கடந்த 2018-ம் ஆண்டு நவம்பர் மாதம், இவருக்கு எதிராக முஸ்லிம் லீக் இளம் தலைவர் ஒருவர் ‘லோக்ஆயுக்தா’ அமைப்பில் ஒரு புகார் கொடுத்தார். அதில், கே.டி.ஜலீலின் ஒன்றுவிட்ட சகோதரர் அதீப், விதிமுறைகளை மீறி, கேரள மாநில சிறுபான்மையினர் மேம்பாட்டு நிதி கழக பொதுமேலாளராக நியமிக்கப்பட்டுள்ளதாக அவர் கூறியிருந்தார். கே.டி.ஜலீல், அதிகார துஷ்பிரயோகம் செய்து, தனது உறவினருக்கு சாதகமாக செயல்பட்டிருப்பதாக அவர் குற்றம் சாட்டி இருந்தார்.

இந்த புகாரை விசாரித்த 2 உறுப்பினர்களை கொண்ட ‘லோக்ஆயுக்தா’ அமர்வு, கடந்த 9-ந் தேதி முதல்-மந்திரி பினராயி விஜயனிடம் அறிக்கை சமர்ப்பித்தது. அதில், கே.டி.ஜலீலுக்கு எதிரான குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்பட்டு இருப்பதாகவும், அவர் மந்திரி பதவியில் தொடரக்கூடாது என்றும் கூறியிருந்தது.

இந்த உத்தரவுக்கு எதிராக கேரள ஐகோர்ட்டில் கே.டி.ஜலீல் நேற்று முன்தினம் மனுதாக்கல் செய்தார்.

இந்தநிலையில், கே.டி.ஜலீல் நேற்று தனது மந்திாி பதவியை ராஜினாமா செய்தார். தனது ராஜினாமா கடிதத்தை முதல்-மந்திரி பினராயி விஜயனுக்கு அவர் அனுப்பி வைத்தார். அதை கவர்னர் ஆரிப் முகமது கானுக்கு முதல்-மந்திரி அலுவலகம் அனுப்பி வைத்தது.
Tags:    

Similar News