செய்திகள்
ஹோலி பண்டிகை

கொரோனா பரவல் அதிகரிப்பு - நாக்பூரில் ஹோலி பண்டிகை கொண்டாட்டங்களுக்கு தடை

Published On 2021-03-26 22:14 GMT   |   Update On 2021-03-26 22:14 GMT
கொரோனா பாதிப்புகள் அதிகரிக்க தொடங்கிய பின்னர் நாட்டில் அதிகம் பாதிப்பு அடைந்த மாநிலங்களில் முதல் இடத்தில் மகாராஷ்டிரா இடம் பெற்றுள்ளது.
நாக்பூர்:

இந்தியாவில் கடந்த ஆண்டு கொரோனா பாதிப்புகள் பரவலாக அதிகரிக்க தொடங்கிய பின் நாட்டில் அதிகம் பாதித்த மாநிலங்களில் முதல் இடத்தில் மகாராஷ்டிரா இடம் பெற்றது.  மகாராஷ்டிராவின் மும்பை, நாக்பூர், புனே உள்ளிட்ட நகரங்கள் அதிக பாதிப்புகளை எதிர்கொண்டன.

இந்த ஆண்டு தொடக்கத்தில் சரிவை நோக்கி சென்ற தொற்று எண்ணிக்கை கடந்த சில நாட்களாக நாடு முழுவதும் உச்சம் பெற்று வருகிறது. நேற்று ஒரே நாளில் 59,118 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்த ஆண்டில் முதல்முறையாக ஒருநாள் கொரோனா பாதிப்பு 60 ஆயிரம் எண்ணிக்கையை நெருங்கியுள்ளது அதிர்ச்சி அடைய செய்துள்ளது.

இதில் மகாராஷ்டிராவில் மீண்டும் அதிக பாதிப்புகள் உறுதி செய்யப்பட்டு வருகின்றன. அங்கு மொத்த பாதிப்பு எண்ணிக்கை 25.64  லட்சம் என்ற எண்ணிக்கையை கடந்துள்ளது.

அவுரங்காபாத்தில் அதிகரித்து வரும் தொற்றால் வார விடுமுறை நாட்களில் முழு அடைப்பு அமல்படுத்தப்பட்டு வருகிறது. இதேபோல் நாக்பூர் மாவட்டத்தில் கடந்த 15-ம் தேதி முதல் 21-ம் தேதி வரை ஒரு வார கால ஊரடங்கு உத்தரவு அமலானது. இவை தவிர அமராவதி, யவத்மல் மற்றும் லத்தூர் போன்ற மாவட்டங்களில் கட்டுப்பாடுகள் முன்பே விதிக்கப்பட்டு விட்டன.

தொற்று அதிகரிப்பினை முன்னிட்டு மகாராஷ்டிராவில் கொரோனா தொடர்புடைய வழிகாட்டு நெறிமுறைகளைப் பின்பற்ற வேண்டும் என அரசு உத்தரவிட்டுள்ளது.

இதேபோல், பண்டிகை கொண்டாட்டங்களுக்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது. வரும் 29-ம் தேதி ஹோலி பண்டிகை கொண்டாடப்பட உள்ள நிலையில், மகாராஷ்டிராவின் நாக்பூர் நகரில் அதற்கு நகராட்சி நிர்வாகம் தடை விதித்துள்ளது.

இதுபற்றி நாக்பூர் நகராட்சி ஆணையாளர் ராதாகிருஷ்ணன் கூறுகையில், நாக்பூரில் மார்க்கெட்டுகள், ஓட்டல்கள், உணவு விடுதிகள் உள்ளிட்டவை வரும் 29-ம் தேதி முழுவதும் அடைக்கப்படும். அத்தியாவசிய தேவைகளுக்கான காய்கறி கடைகள், சிக்கன் உள்ளிட்ட அசைவ கடைகள் மதியம் 1 மணிவரை திறந்திருக்க அனுமதி வழங்கப்படும். பொதுமக்கள் வரும் 28 மற்றும் 29 ஆகிய 2 நாட்கள் ஒன்றாக கூடுவதற்கோ அல்லது கொண்டாட்டங்களில் ஈடுபடுவதற்கோ தடை விதிக்கப்படுகிறது என அவர் தெரிவித்துள்ளார்.

இதேபோல், ஹோலி பண்டிகை கொண்டாட்டங்களை பொது இடங்களில் கொண்டாட வேண்டாம் எனவும், வீட்டு உறுப்பினர்களுடன் இல்லங்களில் கொண்டாட வேண்டும் எனவும் இமாச்சல பிரதேச முதல் மந்திரி ஜெய்ராம் தாக்குர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.  

ஏற்கனவே, மும்பை மற்றும் ஒடிசாவில் ஹோலி கொண்டாட்டத்துக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது நினைவிருக்கலாம்.
Tags:    

Similar News