செய்திகள்
கோப்புப்படம்

கொரோனாவில் இருந்து குணமடைந்த மூதாட்டியை தெருவில் விட சொன்ன மகன்

Published On 2021-03-26 01:57 GMT   |   Update On 2021-03-26 01:57 GMT
கொரோனாவால் பாதிக்கப்பட்ட மூதாட்டியை சொந்த குடும்பமே ஏற்றுக்கொள்ள மறுத்தது. தெருவில் விடும்படி அவரது மகனே கூறியது அதிர்சியை ஏற்படுத்தி உள்ளது.
புனே:

மராட்டிய மாநிலம் புனேயில் கடந்த 13-ந்தேதி 70 வயது மூதாட்டி ஒருவருக்கு பரிசோதனையில் கொரோனா பாதிப்பு இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து சிங்காட் சாலையில் உள்ள மருத்துவமனையில் மூதாட்டி அனுமதிக்கப்பட்டார்.

சிகிச்சையில் குணமடைந்த அவரை கொரோனா அச்சத்தின் காரணமாக வீட்டில் ஏற்றுக்கொள்ள குடும்பத்தினர் மறுத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. இருப்பினும் போலீசார் வழங்கிய தொடர் ஆலோசனைக்கு பிறகு தங்கள் தவறை உணர்ந்துகொண்ட அவர்கள் மூதாட்டியை ஏற்றுக்கொண்டனர்.

இதுகுறித்து அந்த ஆஸ்பத்திரியின் டாக்டர் சுபாங்கி ஷா கூறியதாவது:-

கொரோனாவில் இருந்து குணமடைந்த மூதாட்டி கடந்த செவ்வாய்க்கிழமை டிஸ்சார்ஜ் செய்யப்பட இருந்தார். இதையடுத்து அந்த மூதாட்டியின் மகனை அழைத்து தாயை வீட்டுக்கு அழைத்து செல்லும்படி தெரிவித்தோம்.

ஆனால் வேதனை அளிக்கும் வகையில் குடும்பத்தினர் மூதாட்டியை வீட்டிற்கு அழைத்து செல்ல மறுத்துவிட்டனர். இதனால் குழப்பம் அடைந்த நாங்கள் அவரது தாயை எங்கு அனுப்புவது என்று கேட்டபோது, வீதியில் விட்டுவிடும்படி அலட்சியமாக பதிலளித்தார். இது எங்களுக்கு மேலும் அதிர்ச்சியாக அமைந்தது.

இதையடுத்து சிங்காட் போலீசாரின் உதவியுடன் அவரை வீட்டிற்கு அழைத்து சென்றோம். ஆனால் நாங்கள் சென்ற சமயத்தில் வீடு பூட்டப்பட்டு இருந்தது. அவர்களின் குடும்பத்தினரை தொடர்புகொண்டபோது இரவு 8 மணிக்கு தான் வருவோம் என தெரிவித்தனர்.

அந்த மூதாட்டியை அதுவரை அங்கேயே நிற்கவைப்பது கடினம் என கருதிய போலீசார், அவரை மீண்டும் மருத்துவமனைக்கே அழைத்து வந்தனர். மறுநாள் போலீசார் மூதாட்டியின் குடும்பத்தினரை சந்தித்து அவர்களுக்கு தீவிர ஆலோசனை வழங்கினர். அப்போது தங்கள் தவறை உணர்ந்துகொண்ட குடும்பத்தினர் மூதாட்டியை தங்கள் வீட்டிற்கு அழைத்து சென்றனர்.

இவ்வாறு அவர் கூறினார்.

இதுபற்றி தேவிதாஸ் கெவாரே என்ற போலீஸ் அதிகாரி கூறுகையில், "மூதாட்டியின் மருமகள் தனது தந்தை இறந்து விட்டதால், மாமியாரை வீட்டுக்கு அழைக்க முடியவில்லை என்றும், தான் பேச முடியாத நிலையில் இருப்பதாகவும் தெரிவித்தார். மேலும் பதற்றத்தில் எப்படி பேச வேண்டும் என்று தெரியவில்லை என்றும் குடும்பத்தினர் தெரிவித்தனர்" என்றார்.

இது கொரோனா பீதியோ அல்லது குடும்ப பிரச்சினையோ, மூதாட்டி ஒருவரை சொந்த மகனே வீதியில் விட சொன்னது வேதனை சம்பவமாக அமைந்து விட்டது.
Tags:    

Similar News