செய்திகள்
ராகுல் காந்தி

ஆண்களைவிட பெண்கள் வலிமையானவர்கள் - மாணவிகள் மத்தியில் ராகுல் காந்தி பேச்சு

Published On 2021-03-22 19:13 GMT   |   Update On 2021-03-22 19:13 GMT
ஆண்களைவிட வலிமையானவர்களான பெண்கள், அதை புரிந்துகொள்ளாததால் ஆண்களால் ஏமாற்றப்படுகின்றனர் என்று ராகுல் காந்தி கூறினார்.
கொச்சி:

காங்கிரஸ் தலைவரும், வயநாடு தொகுதி எம்.பி.யுமான ராகுல் காந்தி, கேரளாவில் 2 நாள் தேர்தல் பிரசாரம் மேற்கொள்கிறார். அதன் ஒரு பகுதியாக, கொச்சி செயின்ட் தெரசா மகளிர் கல்லூரி மாணவிகளுடன் நேற்று அவர் உரையாடினார்.

அப்போது ராகுல் காந்தி கூறியதாவது:-

‘ஆண்கள் உங்களுக்கு எப்போதும் சொல்லாத ஒரு ரகசியத்தை நான் உங்களுக்கு சொல்கிறேன். ஆண்களைவிட பெண்கள்தான் மிகவும் வலிமையானவர்கள். ஆனால் அதை பெண்கள் உணராததால் ஆண்கள் அவர்களை ஏமாற்றிக்கொண்டிருக்கிறார்கள்.

சமூகம், பெண்களாகிய உங்களைப் பிடித்து தள்ளும், தாக்கும். தினந்தோறும் உங்களை அவமரியாதைப்படுத்தும், நீங்கள் விரும்பியதை செய்ய விடாது.

எனவே நீங்கள் உங்களுக்குள் இருந்து வலிமையை திரட்டிக்கொள்ள வேண்டும். நாம் எவ்வாறு தள்ளப்படுகிறோம், எந்த சக்திகள் தங்களைப் பாதிக்கின்றன என்று புரிந்து, பெண்கள் தங்களை நிலைநிறுத்திக்கொள்ள வேண்டும்.

நீங்கள் குறைந்த சக்தி கொண்டவர்கள் என்று உங்களை சமூகம் நம்பவைக்க முயலும். அதை ஏற்காதீர்கள். பெண்கள் தங்கள் சக்தியை உணரும் அதேநேரம், அதை தவறாக பயன்படுத்தவும் கூடாது.’

இவ்வாறு ராகுல் காந்தி கூறினார்.

மேலும் அவர், மாணவிகளுக்கு சில அடிப்படையான தற்காப்புக் கலை உத்திகளை கற்றுக்கொடுத்தார்.
Tags:    

Similar News