செய்திகள்
மொடேரா மைதானம்

சர்தார் படேல் ஸ்டேடியத்துக்கு மோடி பெயர் - மத்திய அரசு மீது சிவசேனா கடும் தாக்கு

Published On 2021-02-27 20:46 GMT   |   Update On 2021-02-27 20:46 GMT
அகமதாபாத்தில் உள்ள சர்தார் படேல் கிரிக்கெட் ஸ்டேடியத்திற்கு மோடியின் பெயர் சூட்டப்பட்டதை சிவசேனா விமர்சித்துள்ளது.
மும்பை:

குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் உள்ள சர்தார் படேல் கிரிக்கெட் ஸ்டேடியத்திற்கு மோடியின் பெயர் சூட்டப்பட்டதை கண்டித்துள்ள சிவசேனா, தேர்தலில் மக்கள் அளித்த தீர்ப்பு அரசு பொறுப்பற்று செயல்படுவதற்கான லைசென்ஸ் அல்ல என்று கூறியது.

இதுதொடர்பாக சிவசேனா கட்சி தனது அதிகாரப்பூர்வ பத்திரிகையான சாம்னாவில் மத்திய பா.ஜ.க. அரசை கடுமையாக சாடியுள்ளது. அதில் கூறியிருப்பதாவது:

அனைத்து மிகப்பெரிய விஷயமும் குஜராத்தில் நடைபெற வேண்டும் என பிரதமர் மோடி- அமித்ஷா தலைமையிலான அரசு நினைக்கிறது. இதில் எந்தத் தவறும் இல்லை. ஆனால் அவர்கள் இந்த நாட்டை வழிநடத்துகிறார்கள் என்பதை மறந்துவிட்டதாக தெரிகிறது.

அகமதாபாத்தில் உள்ள சர்தார் படேல் ஸ்டேடியத்திற்கு பிரதமர் நரேந்திர மோடி பெயர் மாற்றப்பட்டு உள்ளது. இதுவரை மெல்போர்ன் மைதானம் தான் உலகில் மிகப்பெரிய கிரிக்கெட் மைதானமாக இருந்தது. தற்போது பிரதமர் மோடியின் பெயரிட்ட இடம் மிகப்பெரியதாக மாறிவிட்டது.

ஆனால், இந்த நடவடிக்கை சீரற்ற ஒன்றாக உள்ளது. ஏனென்றால் இதற்கு முன் அகமதாபாத் ஸ்டேடியத்திற்கு சர்தார் வல்லபாய் படேலின் பெயரிடப்பட்டு இருந்தது.

கடந்த 5 ஆண்டுகளாக காங்கிரஸ் அல்லது நேரு குடும்பத்தினர் சர்தார் படேலின் பெயரை அழிக்க முயற்சிப்பதாக பா.ஜ.க. குற்றம் சாட்டியது. ஆனால் தற்போது அவரது பெயரை யார் அழிக்க முயற்சிக்கிறார்கள் என்ற உண்மை வெளிவந்துள்ளது.

பிரதமர் நரேந்திர மோடி ஒரு சிறந்த தலைவர் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. ஆனால் மகாத்மா காந்தி, பண்டித் நேரு, சர்தார் பட்டேல் அல்லது இந்திரா காந்தி ஆகியோரை விட பெரியவர் என்று அவரை பின்தொடர்பவர்கள் நம்பினால் அது குருட்டுத்தனம் என தெரிவித்துள்ளது.
Tags:    

Similar News