செய்திகள்
ராகுல் காந்தி

கேரள தங்க கடத்தல் வழக்கு ஆமை வேகத்தில் செல்கிறது- ராகுல் காந்தி

Published On 2021-02-24 09:10 GMT   |   Update On 2021-02-24 09:10 GMT
தங்க கடத்தல் வழக்கு விசாரணை ஆமை வேகத்தில் செல்கிறது. மத்திய ஏஜென்சிகள் விசாரணை என்ற பெயரில் வழக்கை இழுத்தடிக்கிறது என்று ராகுல் காந்தி கூறியுள்ளார்,

திருவனந்தபுரம்:

கேரள மாநிலம் வயநாடு தொகுதி எம்.பி.யான ராகுல்காந்தி, அங்கு அடிக்கடி சுற்றுப்பயணம் சென்று மக்களை சந்தித்து வருகிறார். நேற்று முன்தினம் வயநாடு தொகுதியில் சுற்றுப்பயணம் செய்தார்.

கேரள சட்டசபையின் எதிர்க்கட்சி தலைவர் ரமேஷ் சென்னிதலா நடத்திய “ஐஸ்வர்யம் கேரளா’’ யாத்திரையை திருவனந்தபுரம் சங்குமுகம் கடற்கரையில் ராகுல்காந்தி நேற்று நிறைவு செய்துவைத்தார்.

அந்த நிகழ்ச்சியில் கேரள மாநில முன்னாள் முதல்- மந்திரி உம்மன்சாண்டி, வேணுகோபால் எம்.பி., ரம்யா ஹரிதாஸ் எம்.பி. உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். யாத்திரை நிறைவுவிழா கூட்டத்தில் ராகுல்காந்தி எம்.பி. பேசியதாவது:-

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் கொடியை பிடித்தால் முதல்-மந்திரி அலுவலகத்தில் இருந்தே தங்கம் கடத்தலாம். ஆனால் மற்ற கட்சியினர் போராட்டம் நடத்தி இறந்துபோகும் நிலையில் இருந்தாலும் கண்டு கொள்ளமாட்டார்கள்.

கம்யூனிஸ்டு கட்சியை பிடிக்காதவராக இருந்தால் தொடர்ந்து நீங்கள் வேலைக்காக தலைமை செயலகம் முன்பு போராடிக் கொண்டு இருக்கலாம். ஆனால் கம்யூனிஸ்டு கட்சியினர் என்றால் உடனே பரிசீலனை செய்யப்பட்டு தகுதிக்கும் மேலான வேலை வழங்கப்படும்.

தங்க கடத்தல் வழக்கு விசாரணை ஆமை வேகத்தில் செல்கிறது. மத்திய ஏஜென்சிகள் விசாரணை என்ற பெயரில் வழக்கை இழுத்தடிக்கிறது. அதற்கான காரணம் தெரியவில்லை. பாரதீய ஜனதாவுக்கும், மத்திய அரசுக்கும் எதிராக பேசினால் 24மணி நேரத்தில் தாக்குதலுக்கு உள்ளாகலாம்.

இதுபோன்ற பல தாக்குதல்களை நான் சந்தித்துள்ளேன்.

சி.பி.ஐ., அமலாக்கத்துறை ஆகிய மத்திய ஏஜென்சிகள் விசாரணை என்ற பெயரில் கபட நாடகம் ஆடுகின்றன. காங்கிரஸ் தொண்டர்கள் போராடும்போது காவல் துறை கடுமையாக தாக்கி காயப்படுத்துகிறது. ஆகவே அனைவரும் சிந்தித்து செயல் படவேண்டும். நல்லாட்சி அமையபாடு படுவோம்.

இவ்வாறு ராகுல்காந்தி பேசினார்.

Tags:    

Similar News