செய்திகள்
சிவசேனா

ராமர் கோவிலுக்கு நிதி திரட்டுவதற்கு பதிலாக பெட்ரோல், டீசல் விலையை குறையுங்கள் - சிவசேனா

Published On 2021-02-22 23:41 GMT   |   Update On 2021-02-22 23:41 GMT
ராமர் கோவிலுக்கு நிதி திரட்டுவதற்கு பதிலாக பெட்ரோல், டீசல் விலையை குறைக்க வேண்டும் என மத்திய அரசை சிவசேனா வலியுறுத்தி உள்ளது.
மும்பை:

நாடு முழுவதும் பெட்ரோல், டீசல் விலை உயர்வால் பொதுமக்கள் பாதிக்கப்பட்டு வருகின்றனர். ஒரு சில இடங்களில் பெட்ரோல் விலை ரூ.100-ஐ தாண்டி உள்ளது.

இந்நிலையில், பெட்ரோல், டீசல் விலை உயர்வில் சிவசேனா கட்சி மத்திய அரசை கடுமையாக விமர்சித்துள்ளது.

இதுதொடர்பாக, அக்கட்சி பத்திரிகையான சாம்னாவில், ராமர் கோவில் கட்ட பணம் வசூலிப்பதைக் காட்டிலும் அரசு பெட்ரோல், டீசல் விலையை குறைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவித்துள்ளது. இது குறித்து அதில் கூறியிருப்பதாவது:

மத்திய அரசால் அமைக்கப்பட்ட ராமஜென்ம பூமி அறக்கட்டளை அயோத்தியில் ராமா் கோவில் கட்டுவதற்கான நிதியை திரட்டும் பணியில் ஈடுபட்டு வருகிறது. நாடு முழுவதும் கோவில் கட்ட நன்கொடை வசூலிக்கும் பணி கடந்த மாதம் தொடங்கப்பட்டது. ராமர் கோவில் கட்ட பணம் வசூலிப்பதற்கு பதிலாக பெட்ரோல், டீசல் விலையை குறையுங்கள். இதனால் ராம பக்தர்களுக்கு உணவு கிடைக்கும். ராமரும் சந்தோஷப்படுவார்.

கடந்த காங்கிரஸ் ஆட்சியின் போது நடிகர்கள் அக்சய்குமார், அமிதாப் பச்சன் போன்றவர்கள் பெட்ரோல், டீசல் விலை உயர்வுக்கு எதிராக கருத்து தெரிவித்து இருந்தனர். தற்போது பெட்ரோல் விலை ரூ.100-ஐ கடந்த போதும் சினிமா நட்சத்திரங்கள் மவுனமாக உள்ளனர். 2014-ம் ஆண்டு வரை கருத்து கூற சுதந்திரம் இருந்தது. அரசை விமர்சிப்பவர்கள் தேசதுரோக வழக்கில் சிறையில் அடைக்கப்படவில்லை.

தற்போது பெட்ரோல், டீசல் விலை உயர்வுக்கு எதிராக கருத்து கூற முடியாமல் பேச்சுரிமையை இழந்துள்ளோம். எனவே தேவையில்லாமல் நீங்கள் ஏன் அக்சய்குமாரையும், அமிதாப்பச்சனையும் குறை கூறுகிறீர்கள்? என தெரிவித்துள்ளது.
Tags:    

Similar News