செய்திகள்
அஜித்பவார்

விலை உயர்ந்த கார்களை பரிசாக பெற்ற போலீஸ் அதிகாரிகளை கண்டித்த அஜித்பவார்

Published On 2021-02-21 01:55 GMT   |   Update On 2021-02-21 01:55 GMT
தொழில் அதிபர்களிடம் விலை உயர்ந்த காரை பரிசாக வாங்கிய போலீஸ் அதிகாரிகளை துணை முதல்-மந்திரி அஜித்பவார் கண்டித்தார்.
மும்பை :

துணை முதல்-மந்திரி அஜித் பவார் நேற்று முன்தினம் புனே போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்டார். நிகழ்ச்சியில் அவர் திருட்டு வழக்குகளில் பறிமுதல் செய்யப்பட்ட பொருட்களை அதன் உரிமையாளர்களிடம் ஒப்படைத்தார்.

பின்னர் அவர் பேசும் போது மும்பையில் நடந்த கூட்டத்துக்கு தொழில் அதிபர்கள் பரிசாக கொடுத்த விலை உயர்ந்த காரில் வந்த போலீஸ் அதிகாரிகளை கண்டித்தார்.

இதுகுறித்து அவர் பேசியதாவது:-

மும்பையில் நடந்த கூட்டத்துக்கு போலீஸ் அதிகாரி ஒருவர் ரூ.35 லட்சம் மதிப்புள்ள காரில் வந்து இருந்தார். போலீசாருக்கு இதுபோன்ற காரை எப்போது நாம் வாங்கினோம் என ஆச்சரியப்பட்டேன். பின்னர் தான் சில அதிகாரிகளுக்கு தொழில் அதிபர்கள் சொகுசு கார்களை கொடுத்ததை தெரிந்து கொண்டேன்.

தொழில் அதிபர்கள் கொடுத்த காரை, அதுவும் அரசு வேலைக்கு பயன்படுத்தி இருக்கிறார்கள். இது கண்டிப்பாக யோசிக்கப்பட வேண்டிய விவகாரம். இதுகுறித்து முதல்-மந்திரி மற்றும் கூடுதல் தலைமை செயலாளரிடம் ஆலோசனை நடத்தினோம். மாநில உள்துறை மந்திரி சாதாரண காரில் செல்கிறார். ஆனால் அதிகாரிகள் ரூ.35 லட்சம் மதிப்பிலான காரில் பயணம் செய்கின்றனர். இது எப்படி நடக்கிறது?. அரசு பணி, சேவையில் இருப்பவர்கள் கண்டிப்பாக விதிகளை பின்பற்ற வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

இதேபோல ரவுடி கஜனன் மார்னே ஜெயிலில் இருந்து வந்ததை அவரது ஆதரவாளர்கள் பட்டாசு வெடித்து கொண்டாடியதற்கும் அஜித்பவார் தனது அதிருப்தியை தெரிவித்து இருந்தார்.

இதுகுறித்து அவர், " இதுபோன்ற சம்பவங்கள் இனிமேல் நடைபெற கூடாது. குற்றவாளிகள் தான் போலீசாரை பார்த்து பயப்பட வேண்டும், பொதுமக்கள் அல்ல " என்றார்.
Tags:    

Similar News