செய்திகள்
வேளாண் மந்திரி தோமர்

வேளாண் சட்டங்களை எதிர்ப்பவர்களால் ஒரு குறைகூட சொல்ல முடியவில்லை -மத்திய மந்திரி தோமர் பேச்சு

Published On 2021-02-05 08:53 GMT   |   Update On 2021-02-05 08:53 GMT
வேளாண் சட்டங்களுக்கு எதிராக குறிப்பிட்ட ஒரு மாநிலத்தில் உள்ள மக்கள் தவறாக வழிநடத்தப்பட்டு தூண்டி விடப்படுவதாக மத்திய மந்திரி தோமர் பேசினார்.
புதுடெல்லி:

மாநிலங்களவையில் வேளாண் சட்டங்களுக்கு எதிராகவும், விவசாயிகளின் போராட்டத்திற்கு ஆதரவாகவும் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் பேசினர். இந்நிலையில், மத்திய வேளாண் துறை மந்திரி நரேந்திர சிங் தோமர் மாநிலங்களவையில் பேசியதாவது:-

விவசாயிகளின் வருமானத்தை இரட்டிப்பாக்கவும், நாட்டின் வளர்ச்சியில் விவசாயிகளின் பங்களிப்பை அதிகரிக்கவும் தொடர்ச்சியாக நடவடிக்கை எடுத்து வருகிறோம். இதன் ஒரு பகுதியாகவே, வேளாண் சட்டங்கள் கொண்டு வரப்பட்டுள்ளன. விவசாயிகளின் நலனில் பிரதமர் உறுதிபூண்டுள்ளார்.

வேளாண் சட்டங்களில் திருத்தம் கொண்டு வருவதற்கு அரசு தயார் எனக் கூறியதால், அந்த சட்டத்தில் பிரச்சனை உள்ளது என நினைக்க வேண்டாம். குறிப்பிட்ட ஒரு மாநிலத்தில் உள்ள மக்கள் தவறாக வழிநடத்தப்பட்டு தூண்டி விடப்படுகின்றனர். இந்த சட்டம் அமல்படுத்தப்பட்டால், நிலங்கள் பறிமுதல் செய்யப்படும் என விவசாயிகள் தவறாக வழிநடத்தப்படுகின்றனர். எந்த விவசாயியின் நிலத்தையும், வணிகர்கள் பறித்து கொள்ளும் வகையில், வேளாண் சட்டத்தில் ஏதாவது ஒன்று உள்ளதா என்பதை கூற வேண்டும். 

புதிய வேளாண் சட்டங்களில் உள்ள ஒரு குறையை கூட எதிர்க்கட்சிகள் மற்றும் விவசாய சங்கங்களால் கூற முடியவில்லை. நாங்கள் கவுரவம் பார்க்கவில்லை. இந்தச் சட்டத்தில் என்ன கரும்புள்ளி இருக்கிறது? என்று கேட்டுக்கொண்டிருக்கிறோம், யாரும் சொல்வதற்கு முன்வரவில்லை.

இவ்வாறு அவர் கூறினார்.
Tags:    

Similar News