செய்திகள்
எழுத்தாளர் கே.எஸ்.பகவான் முகத்தில் கருப்பு மை பூசிய பெண் வக்கீல்

எழுத்தாளர் கே.எஸ்.பகவான் முகத்தில் கருப்பு மை பூசிய பெண் வக்கீல்

Published On 2021-02-05 02:01 GMT   |   Update On 2021-02-05 02:01 GMT
எழுத்தாளர் கே.எஸ்.பகவான் முகத்தில் பெண் வக்கீல் ஒருவர் கருப்பு மை பூசினார். இந்த சம்பவத்தால் பெங்களூரு சிட்டி சிவில் கோர்ட்டில் பரபரப்பு உண்டானது.
பெங்களூரு :

கன்னடத்தில் பிரபல எழுத்தாளராக இருந்து வருபவர் கே.எஸ்.பகவான் (வயது 75). இவர் சமீபகாலமாக இந்து கடவுள்களை அவமதிக்கும் வகையில் பேசி வருவதாக கூறப்படுகிறது. ராமர் ஒரு குடிகாரர் என்று கூறி கே.எஸ்.பகவான் பரபரப்பை ஏற்படுத்தி இருந்தார். மேலும் அவர் தொடர்ந்து இந்து கடவுள்களை அவமதித்து வந்ததாக சொல்லப்படுகிறது. இதுதொடர்பாக கே.எஸ்.பகவான் மீது போலீஸ் நிலையங்களில் ஏராளமான வழக்குகள் பதிவாகி உள்ளன.

இந்த நிலையில் சமீபத்தில் இந்து மதம் என்று எதுவும் இல்லை. இந்து மதம் அவமானகரமானது. கண்ணியம் உள்ளவர்கள் இந்து மதத்தில் இருக்க கூடாது என்று கே.எஸ்.பகவான் கூறி இருந்தார். இதையடுத்து இந்துக்களை அவமதித்ததாக கே.எஸ்.பகவான் மீது, வக்கீல் மீரா ராகவேந்திரா என்பவர் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கு பெங்களூரு சிட்டி சிவில் கோர்ட்டில் நடந்து வருகிறது. அந்த வழக்கின் மீதான விசாரணை நேற்று நடந்தது.

இந்த வழக்கில் ஆஜராக நேற்று கே.எஸ்.பகவான், பெங்களூரு சிட்டி சிவில் கோர்ட்டுக்கு வந்து இருந்தார். அப்போது அங்கு வந்த பெண் வக்கீலான மீரா ராகவேந்திரா, இந்து மதத்தை அவமதிப்பது குறித்தும், இந்து கடவுள்களை தொடர்ந்து இழிவாக பேசி வருவது குறித்தும் கே.எஸ்.பகவானிடம் கேட்டு தகராறு செய்து உள்ளார். மேலும் தான் மறைத்து வைத்திருந்த கருப்பு மையை எடுத்து கே.எஸ்.பகவான் முகத்தில் வக்கீல் மீரா ராகவேந்திரா பூசினார்.

இதனை சற்றும் எதிர்பாராத கே.எஸ்.பகவான் அதிர்ச்சி அடைந்தார். மேலும் கோர்ட்டில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு இருந்த போலீசார் வக்கீல் மீரா ராகவேந்திராவை சமாதானப்படுத்தி அங்கிருந்து அழைத்து சென்றனர். இதனால் கோர்ட்டு வளாகத்தில் பரபரப்பு உண்டானது.

இந்த சம்பவம் குறித்து வக்கீல் மீரா ராகவேந்திரா மீது அல்சூர்கேட் போலீசில் கே.எஸ்.பகவான் புகார் அளித்தார். அந்த புகாரின்பேரில் மீரா ராகவேந்திரா மீது இந்திய தண்டனை சட்டம் பிரிவு 341 (தவறான நோக்கத்திற்காக தடுப்பது) மற்றும் 504 (வேண்டுமென்றே அவமதிப்பது, பொது அமைதியை சீர்குலைக்க முயற்சிப்பது) ஆகிய 2 பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். இதுதொடர்பாக விசாரணை நடந்து வருகிறது.

இந்த நிலையில் இந்து கடவுள்களை தொடர்ந்து அவமதித்து வந்ததால் எழுத்தாளர் கே.எஸ்.பகவான் முகத்தில் கருப்பு மையை பூசினேன் என்று தனது டுவிட்டர் பக்கத்தில் கூறியுள்ள வக்கீல் மீரா ராகவேந்திரா, கே.எஸ்.பகவான் முகத்தில் கருப்பு மை பூசிய வீடியோவையும் வெளியிட்டார். அந்த வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி உள்ளது.
Tags:    

Similar News