செய்திகள்
பசவராஜ் பொம்மை

கர்நாடகத்தில் 5.5 லட்சம் தனிநபர் கழிவறைகள் கட்டப்படும்: மந்திரி பசவராஜ் பொம்மை

Published On 2021-01-22 02:17 GMT   |   Update On 2021-01-22 02:17 GMT
அடுத்த 5 ஆண்டுகளில் கர்நாடகத்தில் 5.5 லட்சம் கழிவறைகள் கட்டப்படும் என்று மந்திரிசபை கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளதாக சட்டத்துறை மந்திரி பசவராஜ் பொம்மை கூறினார்.
பெங்களூரு :

கர்நாடக மந்திரிசபை கூட்டம் முதல்-மந்திரி எடியூரப்பா தலைமையில் பெங்களூரு விதான சவுதாவில் நேற்று நடைபெற்றது. இதில் பெரும்பாலான மந்திரிகள் கலந்து கொண்டனர். இலாகா மாற்றத்தால் அதிருப்தியில் உள்ள சுதாகர், மாதுசாமி உள்ளிட்டோர் கலந்து கொள்ளவில்லை. இந்த கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகள் குறித்து சட்டத்துறை மந்திரி பசவராஜ் பொம்மை நிருபர்களிடம் கூறியதாவது:-

அங்கன்வாடி மையங்களில் காலியாக உள்ள 44 இடங்களை நிரப்ப முடிவு செய்யப்பட்டுள்ளது. ரூ.10.27 கோடி செலவில் அங்கன்வாடி மைய உதவியாளர்களுக்கு 2 ஜோடி புடவை சீருடை வழங்கப்படும். 1.3 லட்சம் பேருக்கு இந்த பயன் கிடைக்கும். காணொலி மூலம் கூட்டங்களை நடத்த ஏதுவாக மாநிலத்தில் 227 தாலுகா அலுவலகங்களில் காணொலி வசதிகளை ஏற்படுத்த ரூ.35 கோடி நிதி ஒதுக்கப்படுகிறது. கர்நாடகத்தில் தூய்மை பாரதம் திட்டத்தின் கீழ் அடுத்த 5 ஆண்டுகளில் 5.5 லட்சம் தனிநபர் கழிவறைகள் கட்டப்படும்.

அரசு ஊழியர்கள் பணியின்போது உயிரிழக்க நேரிட்டால், அவர்களது குடும்பத்தில் ஒருவருக்கு கருணை அடிப்படையில் வேலை வழங்கப்படுகிறது. இனி மகன் இல்லாதவர்களுக்கும், அவர்களின் திருமணமான மகள்களுக்கும் கருணை வேலை வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது. கர்நாடகத்தில் வீட்டு வசதி வாரியத்தின் அனுமதி பெறாமல் நிறுவப்பட்ட 65 லே-அவுட்டுகளுக்கு ஒருமுறை அனுமதி வழங்க மந்திரிசபை ஒப்புதல் வழங்கியுள்ளது.

மாற்றுத்திறனாளிகள் 1,500 பேருக்கு மூன்று சக்கர மோட்டார் சைக்கிளை வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இதற்கு ரூ.12 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. புதிய மந்திரிகளுக்கு இலாகா ஒதுக்கப்பட்டுள்ளது. சில மந்திரிகளின் இலாகாக்கள் மாற்றப்பட்டுள்ளன. இதுகுறித்து எடியூரப்பா முன்கூட்டியே சம்பந்தப்பட்ட மந்திரிகளிடம் பேசினார். அதற்கு அவர்கள் ஒப்புதல் தெரிவித்தனர். அதனால் இலாகா ஒதுக்கீடு மற்றும் மாற்றத்தால் யாருக்கும் அதிருப்தி இல்லை. இன்று (அதாவது நேற்று) நடைபெற்ற மந்திரிசபை கூட்டத்திற்கு சில மந்திரிகள் வரவில்லை. அவர்கள் முன்கூட்டியே முதல்-மந்திரியிடம் அனுமதி பெற்றனர்.

இவ்வாறு பசவராஜ் பொம்மை கூறினார்.
Tags:    

Similar News