செய்திகள்
எடியூரப்பா

கர்நாடகத்தில் பாஜக சொந்த பலத்தில் ஆட்சி அமைக்கும்- எடியூரப்பா

Published On 2021-01-18 02:07 GMT   |   Update On 2021-01-18 02:07 GMT
கர்நாடகத்தில் 150 தொகுதிகளில் வெற்றி பெற்று பாஜக சொந்த பலத்தில் ஆட்சி அமைக்கும் என்று முதல்-மந்திரி எடியூரப்பா கூறினார்.
பெங்களூரு :

பாகல்கோட்டை மாவட்டத்தில் நேற்று விவசாய திட்ட தொடக்க விழாவில் உள்துறை மந்திரி அமித்ஷா கலந்து கொண்டார். இதில் முதல்-மந்திரி எடியூரப்பா பங்கேற்று பேசியதாவது:-

நமது நாட்டில் தற்போது பிரதமர் மோடி மற்றும் உள்துறை மந்திரி அமித்ஷா ஆகி யோரை பற்றி தான் மக்கள் பேசிக்கொள்கிறார்கள். அவர்கள் புரட்சிகரமான மாற்றங்களை கொண்டு வந்துள்ளனர். மோடி மீண்டும் பிரதமராகவும், அமித்ஷா உள்துறை மந்திரியாகவும் வர வேண்டும் என்று நான் கோவில்களுக்கு செல்லும்போது வேண்டிக் கொள்கிறேன்.

அடுத்து வரும் நாடாளுமன்ற தேர்தலில் பா.ஜனதா மீண்டும் வெற்றி பெற்று ஆட்சியை பிடிக்கும். கர்நாடகத்தில் 150 தொகுதிகளில் வெற்றி பெற்று பா.ஜனதா சொந்த பலத்தில் ஆட்சி அமைக்கும். அதற்காக நாங்கள் பாடுபடுவோம். நெருக்கடி காலத்திலும் வளர்ச்சி பணிகள் நடைபெற்று உள்ளது. கர்நாடகத்தை வளர்ச்சி பாதையில் முதல் நிலைக்கு கொண்டு செல்ல நான் பாடுபட்டு வருகிறேன். இதற்கு விவசாயிகளின் ஒத்துழைப்பு அவசியம் தேவை.

புதிய வேளாண் சட்டங்கள் குறித்து எதிர்க்கட்சிகள் குழப்பத்தை ஏற்படுத்துகின்றன. இதை விவசாயிகள் கண்டுகொள்ள வேண்டாம். விவசாயிகளின் வருமானத்தை அதிகரிக்க வேண்டும் என்ற எண்ணத்தில் தான் புதிய வேளாண் சட்டங்கள் கொண்டு வரப்பட்டுள்ளன. இதை விவசாயிகள் புரிந்து கொள்ள வேண்டும்.

கொரோனா காரணமாக வளர்ச்சி பணிகள் முடங்கின. அரசுக்கு வருவாய் குறைந்துவிட்டது. ஆயினும் சக்தி மீறி வளர்ச்சி திட்டங்களை செயல்படுத்தி வருகிறோம். கர்நாடகத்தில் நல்ல மழை பெய்து, அனைத்து அணைகளும் நிரம்பி வழிகின்றன. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சியாக இருக்கிறார்கள். கரும்பு விவசாயிகளுக்கு அடுத்த 2 ஆண்டுகளுக்கு தண்ணீர் பிரச்சினை இருக்காது.

கர்நாடகத்தில் மக்களும், விவசாயிகளும் நிம்மதியாக வாழ வேண்டும் என்று நான் விரும்புகிறேன். இதற்காக பல்வேறு திட்டங்களை அமல்படுத்தி வருகிறேன். எத்தனால் உற்பத்தியை ஊக்கப்படுத்த மத்திய அரசு நடவடிக்கை எடுத்துள்ளது. இதை மத்திய மந்திரி நிதின் கட்காரி கூறியுள்ளார். இது விவசாயிகளின் வருமானத்தை அதிகரிக்க உதவும்.

எங்கள் அரசு, புதிய தொழில் கொள்கையை அமல்படுத்தியுள்ளது. இதன் மூலம் மாநிலத்தின் அனைத்து பகுதிகளிலும் தொழில் தொடங்க ஊக்கம் அளிக்கப்படும். இதனால் வேலை வாய்ப்புகள் பெருகும். தொழில் தொடங்க முன்வரும் நிறுவனங்களுக்கு எளிதாக அனுமதி கிடைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. தொழில் நிறுவனங்கள் வருகைக்கான கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்தவும் திட்டமிடப்பட்டுள்ளது.

இவ்வாறு எடியூரப்பா பேசினார்.
Tags:    

Similar News