செய்திகள்
பிரதமர் மோடி

இரண்டு தடுப்பூசிகளால் மனிதகுலத்தை காப்பாற்ற இந்தியா தயார் -பிரதமர் மோடி

Published On 2021-01-09 09:17 GMT   |   Update On 2021-01-09 09:17 GMT
இரண்டு தடுப்பூசிகளால் மனிதகுலத்தை காப்பாற்ற இந்தியா தயாராக உள்ளது என பிரதமர் மோடி பேசினார்.
புதுடெல்லி:

16-வது வெளிநாடு வாழ் இந்தியர்கள் மாநாட்டை பிரதமர் மோடி காணொளி வாயிலாக இன்று தொடங்கி வைத்தார். அப்போது அவர் பேசியதாவது:-

இன்று நாம் உலகின் பல்வேறு மூலைகளிலிருந்தும் இணையம் வாயிலாக இணைந்துள்ளோம். ஆனால் நம் மனம் எப்போதும் பாரத மாதாவுடன் இணைக்கப்பட்டுள்ளது. கடந்த பல ஆண்டுகளில் வெளிநாடு வாழ் இந்தியர்கள், மற்ற நாடுகளில் தங்கள் அடையாளத்தை பலப்படுத்தியுள்ளனர்.

பிபிஇ கருவிகள், முக கவசங்கள், வென்டிலேட்டர்கள் மற்றும் சோதனைக் கருவிகளை இந்தியா வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்தது. ஆனால் இன்று நம் நாட்டிலேயே தயாரிக்கப்பட்டு தன்னிறைவு அடைந்துள்ளது. இன்று உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட இரண்டு கொரோனா தடுப்பூசிகளால் மனிதகுலத்தை காப்பாற்ற இந்தியா தயாராக உள்ளது. 

இந்தியா பயங்கரவாதத்தை எதிர்கொண்டபோது, உலகமும் இந்த சவாலை எதிர்கொள்ள தைரியம் பெற்றது. இன்று, ஊழலை முடிவுக்கு கொண்டுவர இந்தியா தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துகிறது. திட்டப் பயனாளிகளுக்கு அவர்களின் வங்கிக் கணக்கில் பணம் வரவு வைக்கப்படுகிறது. ஏழைகளை முன்னேற்றுவதற்காக மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகள் உலகம் முழுவதும் விவாதிக்கப்பட்டு வருகிறது. புதுப்பிக்கத்தக்க எரிசக்தி துறையில், வளரும் நாடு கூட முன்னிலை வகிக்க முடியும் என்பதை நாம் காட்டியுள்ளோம்.

இந்தியா உடைந்து விடும் என்றும், ஜனநாயகம் நாட்டில் சாத்தியமற்றது என்றும் சிலர் சொன்னார்கள். ஆனால் உண்மை என்னவென்றால், இந்தியா இன்று ஒரு வலுவான மற்றும் துடிப்பான ஜனநாயக நாடாக திகழ்கிறது.

இவ்வாறு அவர் பேசினார்.
Tags:    

Similar News