செய்திகள்
விவசாயிகள் போராட்டம்

பேச்சுவார்த்தைக்கு போகலாமா, வேண்டாமா? -விவசாய சங்கங்கள் இன்று ஆலோசனை

Published On 2020-12-26 06:04 GMT   |   Update On 2020-12-26 06:04 GMT
மத்திய அரசுடன் பேச்சுவார்த்தைக்கு செல்வது குறித்து விவசாய சங்கங்களின் நிர்வாகிகள் இன்று கூடி ஆலோசனை நடத்த உள்ளனர்.
புதுடெல்லி:

புதிய வேளாண் சட்டங்களை திரும்ப பெற வலியுறுத்தில் டெல்லி எல்லைப்பகுதிகளில் விவசாயிகள் கடந்த நவம்பர் 26ம் தேதி முதல் போராட்டம் நடத்தி வருகின்றனர். மத்திய அரசு கொண்டு வந்துள்ள வேளாண் சட்டங்கள், குறைந்தபட்ச ஆதரவு விலை மற்றும் மண்டி முறைக்கு பாதகமாக அமைந்திருப்பதாக கூறும் விவசாயிகள், கடும் குளிரையும் பொருட்படுத்தாமல் போராடி வருகின்றனர். 

மேலும், புதிய சட்டத்தின்படி ஒப்பந்த விவசாயம் என்ற முறை நடைமுறைக்கு வந்தால் விவசாயிகளின் நிலம் பறிபோகும் என்ற கவலையும் விவசாயிகள் மத்தியில் எழுந்துள்ளது. இதனால் தங்கள் கோரிக்கையில் விவசாயிகள் உறுதியாக உள்ளனர். விவசாயிகளின் இந்த 
போராட்டம்
 இன்று 31-வது நாளாக நீடிக்கிறது.

மத்திய அரசு சார்பில் விவசாயிகளுடன் இதுவரை நடத்தப்பட்ட பேச்சுவார்த்தைகள் தோல்வியில் முடிந்ததையடுத்து அடுத்தகட்ட பேச்சுவார்த்தைக்கு வரும்படி மத்திய அரசு அழைப்பு விடுத்துள்ளது. ஆனால், விவசாயிகள் தரப்பில் இதுவரை பேச்சுவார்த்தைக்கான எந்த முடிவும் எடுக்கப்படவில்லை. இதனால் மீண்டும் மத்திய அரசு கடிதம் எழுதியது. பேச்சுவார்த்தைக்கு தயாராக இருப்பதாக பிரதமர் மோடியும் கூறினார்.

ஏற்கனவே நிராகரிக்கப்பட்ட அர்த்தமற்ற திருத்தங்களை மீண்டும் கொண்டு வரக்கூடாது என்றும், ஆக்கப்பூர்வமான உறுதியான திட்டங்களை எழுத்துப்பூர்வமாக கொண்டு வரவேண்டும் என்றும் விவசாய சங்கங்கள் வலியுறுத்தின.

இந்நிலையில், விவசாய சங்கங்களின் நிர்வாகிகள் இன்று கூடி ஆலோசனை நடத்துகின்றனர். மத்திய அரசின் கோரிக்கையை ஏற்று பேச்சுவார்த்தைக்கு செல்வதா? அல்லது சட்டங்களை வாபஸ் பெறும்வரை போராட்டத்தை தொடர்வதா? என்பது தொடர்பாக விவசாய சங்க நிர்வாகிகள் தங்கள் கருத்துக்களை முன்வைக்கின்றனர். அதன் அடிப்படையில், மத்திய அரசுக்கு பதில் அளிப்பது குறித்து முடிவு செய்யப்படும்.
Tags:    

Similar News