செய்திகள்
முதல் மந்திரி பினராயி விஜயன்

வேளாண் சட்டங்களுக்கு எதிராக தீர்மானம் - கேரள சட்டசபை நாளை கூடுகிறது

Published On 2020-12-21 20:41 GMT   |   Update On 2020-12-21 20:41 GMT
மத்திய அரசு கொண்டு வந்துள்ள புதிய வேளாண் சட்டங்களுக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றுவதற்காக கேரள சட்டப்பேரவைக் கூட்டத்தின் சிறப்பு அமர்வு நாளை கூடுகிறது.
திருவனந்தபுரம்:

மத்திய அரசு கொண்டு வந்துள்ள 3 வேளாண் சட்டங்கள் தங்கள் நலனுக்கு எதிரானவை எனக் கருதி அவற்றுக்கு எதிராக விவசாயிகள் போர்க்கொடி உயர்த்தி வருகின்றனர். அவற்றை வாபஸ் பெற வலியுறுத்தி டெல்லியின் எல்லைகளை முற்றுகையிட்டு வட மாநிலங்களை, குறிப்பாக பஞ்சாப், அரியானா மாநிலங்களைச் சேர்ந்த விவசாயிகள் தொடர் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

போராடி வரும் விவசாயிகளின் 40 அமைப்புகளுடன் மத்திய அரசு 5 கட்ட பேச்சுவார்த்தை நடத்தியும் முடிவு எட்டப்படவில்லை.

வேளாண் சட்டங்களை வாபஸ் பெற்றே ஆக வேண்டும் என்பதில் விவசாய அமைப்புகளும், அதற்கு அழுத்தம் தரவே கூடாது, வேண்டுமானால் திருத்தங்கள் செய்யலாம் என மத்திய அரசும் தத்தமது நிலைப்பாடுகளில் உறுதியாக உள்ளனர். இதனால் விவசாயிகள் போராட்டம் தொடர்கிறது. வாட்டியெடுக்கும் குளிர்கூட விவசாயிகளை போராடுவதில் இருந்து தடுக்க முடியவில்லை. வேளாண் சட்டங்களுக்கு பல்வேறு மாநில அரசுகளும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன.

இந்நிலையில், மத்திய அரசு கொண்டு வந்துள்ள புதிய வேளாண் சட்டங்களுக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றுவதற்காக கேரள சட்டப்பேரவைக் கூட்டத்தின் சிறப்பு அமர்வு நாளை கூடுகிறது. கேரள ஆளுநர் ஆரிஃப் முகமது கான் சட்டசபை சிறப்பு கூட்டத்திற்கு ஒப்புதல் அளித்துள்ளார்.

விவசாயிகளுக்கு ஆதரவாக வேளாண் சட்டங்களுக்கு எதிராக சட்ட ரீதியாக நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என கேரள அரசு ஏற்கனவே அறிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
Tags:    

Similar News