செய்திகள்
ராஜேஸ் தோபே

மகாராஷ்டிராவில் முதல் கட்டமாக 3 கோடி பேருக்கு கொரோனா தடுப்பூசி: ராஜேஸ் தோபே

Published On 2020-12-18 02:38 GMT   |   Update On 2020-12-18 02:38 GMT
மகாராஷ்டிராவில் ஜனவரி மாதம் முதல் பெரிய அளவில் தடுப்பு மருந்தை செலுத்தும் பணி தொடங்கும். முதல் கட்டமாக தடுப்பூசி சுமார் 3 கோடி பேருக்கு போடப்படும் என்று சுகாதாரத்துறை மந்திரி ராஜேஸ் தோபே கூறினார்.
மும்பை :

ஆட்கொல்லி கொரோனா வைரஸ் உலகையே புரட்டிப்போட்டு உள்ளது. இந்தநிலையில் அமொிக்கா, கனடா, இங்கிலாந்து உள்ளிட்ட நாடுகளில் பொதுமக்களுக்கு கொரோனா தடுப்பு மருந்து செலுத்தும் பணி தொடங்கி உள்ளது. கனடாவில் 89 வயது மூதாட்டி ஒருவருக்கும், அமொிக்காவில் நர்ஸ் ஒருவருக்கும் தடுப்பூசி போடப்பட்டது.

இந்தியாவிலும் விரைவில் பொதுமக்களுக்கு கொரோனா தடுப்பூசி போடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்தநிலையில் மத்திய அரசு அனுமதி கொடுத்தவுடன் மகாராஷ்டிராவில் எத்தனை பேருக்கு கொரோனா தடுப்பு மருந்து செலுத்தப்படும் என்பது குறித்து மாநில சுகாதாரத்துறை மந்திரி ராஜேஸ் தோபே கூறியுள்ளார்.

இது குறித்து அவர் நேற்று நிருபர்களிடம் கூறியதாவது:-

இந்த மாத இறுதியில் அதிகம் பேருக்கு கொரோனா தடுப்பு மருந்து கொடுக்க மத்திய அரசு அனுமதி வழங்கினால், மகாராஷ்டிராவில் ஜனவரி மாதம் முதல் பெரிய அளவில் தடுப்பு மருந்தை செலுத்தும் பணி தொடங்கும். நாங்கள் அதற்கு தயாராகி வருகிறோம். முதல் கட்டமாக தடுப்பூசி சுமார் 3 கோடி பேருக்கு போடப்படும்.

எனது கணிப்பின்படி மருத்துவ ஊழியர்கள், சுகாதாரப்பணியாளர்கள், முன்கள பணியாளர்கள், 50 வயதுக்கு மேற்பட்டவா்கள், பிற நோய் பாதிப்பு உள்ளவர்களின் எண்ணிக்கை 3 கோடி வந்துவிடும். முதல் கட்டமாக இவர்களுக்கு தடுப்பூசி செலுத்தப்படும்.

மகாராஷ்டிராவை போல பல மாநிலங்கள் மத்திய அரசு கொரோனா தடுப்பு மருந்தை இலவசமாக பொதுமக்களுக்கு வழங்க வேண்டும் என தெரிவித்து உள்ளன. மத்திய அரசு பொது மக்களுக்கு இலவசமாக தடுப்பு மருந்தை கொடுக்க வேண்டும் என நான் நினைக்கிறேன். இந்த விவகாரத்தில் மத்திய அரசின் அறிவிப்புக்காக நாங்கள் காத்திருக்கிறோம்.

மாநிலத்தில் தடுப்பு மருந்தை செலுத்துவதற்கான உரிமை, அனுமதி வழங்குவது மத்திய அரசின் கையில் தான் உள்ளது. தடுப்பு மருந்தின் பாதுகாப்பு மற்றும் செயல்திறனில் மத்திய அரசுக்கு திருப்தி கிடைத்தவுடன், அவர்கள் மருந்தை வினியோகிப்பதற்கான அனுமதி வழங்குவது போன்ற நடவடிக்கையில் ஈடுபடுவார்கள்.

முதல் கட்டமாக தடுப்பூசி போட தேர்வு செய்யப்பட்டவர்களுக்கு செல்போனில் குறுந்தகவல் அனுப்பப்படும். அவர்கள் தடுப்பு மருந்து செலுத்தப்பட்டவுடன் ½ மணி நேரம் மருந்து செலுத்தும் மையத்தில் இருக்க வேண்டும். இதுபோன்ற நடைமுறைகள் கடுமையாக பின்பற்றப்படும்.

ஒரு வேளை மத்திய அரசு இலவசமாக தடுப்பு மருந்தை கொடுக்கவில்லை என்றாலும், மாநில மக்களுக்கான எங்களின் கடமையில் இருந்து நாங்கள் தவறமாட்டோம்.

இவ்வாறு அவர் கூறினார்.
Tags:    

Similar News