செய்திகள்
திருப்பதி கோவில்

திருப்பதியில் கடந்த மாதம் ரூ.65 கோடி உண்டியல் வருமானம்

Published On 2020-12-13 06:08 GMT   |   Update On 2020-12-13 06:08 GMT
திருப்பதியில் இ-உண்டியல் மற்றும் ஏழுமலையான் கோவில் உண்டியல் மூலம் தேவஸ்தானத்துக்கு நவம்பர் மாதத்தில் ரூ.65.4 கோடி வருமானம் கிடைத்தது.
திருப்பதி:

திருமலை அன்னமய்யா பவனில் தொலைபேசி வாயிலாக பக்தர்களிடம் குறைகேட்கும் நிகழ்ச்சி நடந்தது. தேவஸ்தான செயல் அதிகாரி ஜவஹர் ரெட்டி பக்தர்கள் கேட்ட கேள்விகளுக்கு பதிலளித்தார்.

அதைத் தொடர்ந்து அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

இ-உண்டியல் மற்றும் ஏழுமலையான் கோவில் உண்டியல் மூலம் தேவஸ்தானத்துக்கு நவம்பர் மாதத்தில் ரூ.65.4 கோடி வருமானம் கிடைத்தது.

இந்த கால கட்டத்தில் 8.47 லட்சம் பக்தர்கள் தரிசனம் செய்துள்ளனர். 50.4 லட்சம் லட்டுகள் விற்பனை செய்யப்பட்டுள்ளது. 8.99 லட்சம் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டுள்ளது. 2.92 லட்சம் பக்தர்கள் முடிகாணிக்கை செலுத்தியுள்ளனர்.

வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு திருமலையில் 10 நாட்களுக்கு சொர்க்க வாசல் திறந்து வைக்கப்பட உள்ளது. இதற்காக 10 நாட்களுக்கும் தலா 20 ஆயிரம் விரைவு தரிசன டிக்கெட்டுகள் ஆன்லைனில் வெளியிடப்பட்டுள்ளது.

மார்கழி மாதம் முழுவதும் காலை வேளையில் திருமலை மற்றும் திருப்பதியில் உள்ள கோவில்களில் சுப்ரபாதத்துக்கு பதிலாக திருப்பாவை பாசுரங்கள் பாராயணம் செய்யப்பட உள்ளன.

வருகிற 14-ந்தேதி முதல் ஜனவரி 7-ந்தேதி வரை 25 நாட்களுக்கு அத்யயனோற்சவம் நடக்க உள்ளது. அதில் நாலாயிற திவ்ய பிரபந்தத்தில் உள்ள பாசுரங்களை வைணவர்கள் ஒன்றுகூடி ரங்கநாயகர் மண்டபத்தில் பாராயணம் செய்ய உள்ளனர். திருமலையில் வருகிற 30-ந்தேதி பிரணய கலகோற்சவம் என்னும் ஊடல் உற்சவம் நடைபெற உள்ளது.

புராணங்களில் கூறியுள்ளபடி ஏழுமலையானின் புஷ்ப கைங்கரியத்துக்கு தேவையான மலர்கள் அனைத்தும் பயிரிடுவதற்காக திருமலையில் 10 ஏக்கர் பரப்பளவில் மலர் நந்தவனம் அமைக்கப்பட உள்ளது என்றார்.
Tags:    

Similar News