செய்திகள்
கைது

திருமண வீடுகளில் திருடுவதற்காக ரூ.12 லட்சம் வரை குத்தகைக்கு எடுக்கப்பட்ட சிறுவர்கள்

Published On 2020-12-05 21:34 GMT   |   Update On 2020-12-05 21:34 GMT
திருமண வீடுகளில் திருடுவதற்காக ரூ.10 லட்சம் முதல் ரூ.12 லட்சம் வரை கொடுத்து சிறுவர்களை குத்தகைக்கு எடுக்கப்பட்ட அதிர்ச்சி சம்பவம் நிகழ்ந்துள்ளது.
புதுடெல்லி:

டெல்லி மற்றும் வடமாநிலங்களில் தற்போது திருமண காலம் ஆகும். சமீபத்தில் திருமணம் நடைபெற்ற சில மண்டபங்களில் விலையுயர்ந்த நகைகள் மற்றும் ரொக்கப்பணம் திருடு போனதாக டெல்லி போலீசுக்கு புகார்கள் வந்தன. அவை தொடர்பாக விசாரித்ததில், ரூ.1 கோடி மதிப்புக்கு மேல் பணம், நகைகள் திருடப்பட்டது தெரியவந்தது. அதைத் தொடர்ந்து முக்கியமான திருமணங்களை போலீசார் கண்காணிக்க தொடங்கினர். பின்னர் அங்கு பதிவான வீடியோ காட்சிகளை பார்வையிட்டனர்.

அப்போது ஒரே நபர்கள் பல திருமணங்களில் நடமாடியது கண்டுபிடிக்கப்பட்டது. அவர்களில் 5 வாலிபர்கள் மற்றும் 2 சிறுவர்களை போலீசார் நேற்று முன்தினம் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து ரூ.4 லட்சம் ரொக்கம் மற்றும் நகைகள், பரிசுப்பொருட்கள் கைப்பற்றப்பட்டன. விசாரணையில், அவர்கள் அனைவரும் மத்தியபிரதேச மாநிலத்தைச் சேர்ந்தவர்கள் என்பது தெரியவந்தது. இந்த கும்பலில் உள்ள சிறுவர்கள் ஆண்டுக்கு ரூ.10 லட்சம் முதல் ரூ.12 லட்சம் வரை கொடுத்து குத்தகைக்கு எடுக்கப்பட்டவர்கள் என்ற அதிர்ச்சி தகவலும் கிடைத்தது. குத்தகைக்கு எடுக்கப்பட்ட அவர்களுக்கு நூதன திருட்டுகள் பற்றி சிறப்பு பயிற்சிகள் அளிக்கப்பட்டு உள்ளன.

இந்த கும்பலில் இன்னும் பலபேர் இருப்பதாக கூறப்படுகிறது. அவர்களை போலீசார் தேடி வருகிறார்கள்.
Tags:    

Similar News