செய்திகள்
சொந்தமாக உணவு கொண்டுவந்த விவசாயிகள்

பேச்சுவார்த்தையின் போது அரசு வழங்கிய உணவை ஏற்கமறுத்த விவசாயிகள்...

Published On 2020-12-05 11:18 GMT   |   Update On 2020-12-05 11:18 GMT
மத்திய அரசுடன் பேச்சுவார்த்தை நடத்திவரும் விவசாய குழு தலைவர்கள் தங்களுக்கு தேவையான உணவு மற்றும் குடிநீரை தாங்களே கொண்டுவந்துள்ளனர்.
புதுடெல்லி:

மத்திய அரசு கொண்டு வந்த 3 வேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து விவசாயிகள் 'டெல்லி சலோ' போராட்டத்தை 10-வது நாளாக தொடர்ந்து நடத்தி வருகின்றனர். 

முன்னதாக கடந்த மாதம் இறுதியில் டெல்லியில் போராட்டம் நடத்தும் நோக்கில் வந்த விவசாயிகள் அரியானா எல்லையில் காவல்துறையால் தடுத்து நிறுத்தப்பட்டனர். அப்போது போலீசாருக்கும் விவசாயிகளுக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. 

தடியடி நடத்தியும், கண்ணீர் புகைகுண்டு வீசியும், தண்ணீர் பீய்ச்சி அடித்தும் விவசாயிகளை போலீசார் களைக்க முற்பட்டனர். இந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.

நிலையை தீவிரமடைந்ததையடுத்து, விவசாயிகள் டெல்லிக்குள் செல்ல போலீசார் அனுமதி வழங்கினர். மேலும், டெல்லியில் உள்ள புராரி மைதானத்தில் விவசாயிகள் போராட்டம் நடத்த போலீசார் அனுமதி அளித்தனர். 

ஆனால், அரியானா - டெல்லி எல்லையான சிங்கு மற்றும் டிக்ரியில் பகுதியிலேயே விவசாயிகள் தொடர்ந்து 10-வது நாளாக போராட்டம் நடத்தி வருகின்றனர். உத்தரபிரதேச-டெல்லி எல்லையிலும் விவசாயிகள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

இதற்கிடையில், போராட்டம் தொடர்பாக மத்திய அரசு மற்றும் விவசாய  குழுக்கள் இடையே ஏற்கனவே 4 கட்டங்களாக பேச்சுவார்த்தை நடைபெற்றது. இந்த பேச்சுவார்த்தை அனைத்தும் தோல்வியடைந்தது.

தொடர்ந்து இன்று 5-ம் கட்ட பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது. இந்த பேச்சுவார்த்தையில் மத்திய அரசு சார்பில் மத்திய வேளாண் மந்திரி நரேந்திரசிங் தோமர், வர்த்தகம் மற்றும் உணவுத்துறை மந்திரி பியூஸ் கோயல் ஆகியோர் பங்கேற்றுள்ளனர்.

இந்நிலையில், பேச்சுவார்த்தையில் பங்கேற்றுள்ள விவசாய குழுக்களின் தலைவர்களுக்கு மத்திய அரசு உணவு மற்றும் குடிநீர் போன்ற அத்தியாவசிய வசதிகளை ஏற்பாடு செய்திருந்தது.

ஆனால், மத்திய அரசு வழங்கிய உணவு மற்றும் குடிநீரை விவசாய குழு தலைவர்கள் ஏற்கமறுத்துவிட்டனர். மேலும், தங்களுக்கு தேவையான உணவு மற்றும் குடிநீரை தாங்களாகவே கொண்டுவந்துள்ளனர். 

கூட்டத்தில் உணவு இடைவெளையின் போது விவசாயிகள் தாங்கள் கொண்டுவந்த உணவை பகிர்ந்து குழுவாக இணைந்து உட்கொண்டனர். மேலும், அரசு தரப்பில் இருந்து வழங்கப்பட்ட குடிநீர், தேநீர் என எந்த உபசரிப்பையும் விவசாயிகள் ஏற்கொள்ளவில்லை.

இந்த சம்பவம் வேளாண் சட்டங்களை ரத்துசெய்ய வேண்டும் என்ற கோரிக்கையில் விவசாயிகள் திடமாக உள்ளனர் என மத்திய அரசுக்கு உணர்த்துவதாக அரசியல் விமர்சகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
Tags:    

Similar News