செய்திகள்
கோப்புபடம்

கன்னட அமைப்பினர் நாளை பந்த் அறிவிப்பு - கர்நாடகாவில் பலத்த போலீஸ் பாதுகாப்பு

Published On 2020-12-04 09:57 GMT   |   Update On 2020-12-04 09:57 GMT
கர்நாடகாவில் நாளை கன்னட அமைப்பினர் பந்த் அறிவித்துள்ள நிலையில் முக்கியமான இடங்களில் போலீஸ் பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

பெங்களூரு:

கர்நாடகத்தில் முதல்-மந்திரி எடியூரப்பா, மராட்டிய மேம்பாட்டு வாரியம் அமைப்பதாக அறிவித்துள்ளார். அதற்கு ரூ.50 கோடி நிதி ஒதுக்கப்படும் என்றும் அவர் கூறி இருக்கிறார். பெலகாவி வி‌ஷயத்தில் கர்நாடகம், மராட்டியம் இடையே எல்லை பிரச்சினை நீடித்து வரும் நிலையில், மராட்டிய சமூக மக்களின் வளர்ச்சிக்கு முதல்-மந்திரி அறிவித்துள்ள இந்த திட்டத்தை கன்னட சங்கங்கள் கடுமையாக எதிர்த்து வருகின்றன.

இந்த முடிவை வாபஸ் பெறக்கோரி நாளை(5-ந்தேதி) கர்நாடகத்தில் முழு அடைப்பு நடத்தப்படும் என்று கன்னட சங்கங்களின் கூட்டமைப்பு கடந்த நவம்பர் மாதம் அறிவித்தது. இந்த போராட்டத்திற்கு அரசியல் கட்சிகள் ஆதரவு வழங்கவில்லை. முழு அடைப்பை ஆளும் பா.ஜனதா கடுமையாக எதிர்த்து வருகிறது.

முழு அடைப்பு நடத்தினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று முதல்-மந்திரி எடியூரப்பா எச்சரிக்கை விடுத்துள்ளார். இந்த நிலையில் முழு அடைப்பு குறித்து கன்னட சங்கங்களின் கூட்டமைப்பின் தலைவர் வாட்டாள் நாகராஜ் நிருபர்களிடம் கூறுகையில், கர்நாடக அரசு, மராட்டிய மேம்பாட்டு வாரியம் அமைக்கும் முடிவை வாபஸ் பெறக்கோரி நாங்கள் திட்டமிட்டப்படி நாளை முழு அடைப்பு நடத்துகிறோம்.

கன்னட மக்களின் உரிமையை நிலைநாட்டவே நாங்கள் இந்த போராட்டத்தை நடத்துகிறோம். இதற்கு ஒட்டுமொத்த மாநில மக்களும் ஆதரவு வழங்க வேண்டும். பெங்களூருவில் முதல்மந்திரி எடியூரப்பாவின் இல்லத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்துவோம். அன்றைய தினம் பொதுமக்கள் யாரும் வீட்டை விட்டு வெளியே வர வேண்டாம் என்றார்.

பெங்களூரு நகர போலீஸ் கமி‌ஷனர் கமல்பந்த், முழு அடைப்புக்கு அனுமதி கிடையாது என்றும், இந்த போராட்டத்தின்போது பொதுச்சொத்துகளை காக்க போலீசார் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், சட்டத்திற்கு விரோதமாக செயல்படுகிறவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் தனக்கு கீழ் பணியாற்றும் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார்.

இதுகுறித்து கர்நாடக போலீஸ் மந்திரி பசவராஜ் பொம்மை கூறுகையில் அரசின் சொத்துகளுக்கு சேதம் விளைவித்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும். பாதுகாப்பு ஏற்பாடுகளை மேற்கொள்ளும்படி போலீஸ் உயர் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளேன் என்றார்.

இதைத் தொடர்ந்து கர்நாடகாவில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. முக்கிய இடங்களில் போலீசார் பாதுகாப்புக்காக நிறுத்தப்பட்டுள்ளனர்.

Tags:    

Similar News