செய்திகள்
மந்திரி பசவராஜ் பொம்மை

மந்திரிசபை விரிவாக்கத்தில் பாஜக மேலிட தலைவர்கள் எடுக்கும் முடிவே இறுதியானது: மந்திரி பசவராஜ் பொம்மை

Published On 2020-12-01 02:01 GMT   |   Update On 2020-12-01 02:01 GMT
மந்திரிசபை விரிவாக்கத்தில் எடியூரப்பா, பா.ஜனதா மேலிட தலைவர்கள் எடுக்கும் முடிவே இறுதியானது. இந்த விவகாரத்தில் மேலிட தலைவர்கள் எடுக்கும் முடிவுக்கு அனைவரும் கட்டுப்படுவார்கள் என்று மந்திரி பசவராஜ் பொம்மை தெரிவித்துள்ளார்.
கதக் : முதல்-மந்திரி எடியூரப்பா தலைமையிலான பா.ஜனதா ஆட்சியில் மந்திரிசபை விரிவாக்கம் தொடர்ந்து தள்ளி போன வண்ணம் உள்ளது. இதனால் மந்திரி பதவியை எதிர்பார்த்து காத்திருக்கும் எம்.எல்.ஏ.க்கள் ஏமாற்றம் அடைந்துள்ளனர். மந்திரிசபை விரிவாக்கம் தற்போது நடைபெற வாய்ப்பில்லை என்றும் சொல்லப்படுகிறது. மந்திரி பதவிக்கு எம்.எல்.ஏ.க்கள் இடையே கடும் போட்டி நிலவுவதால், மந்திரிசபை விரிவாக்கத்தை தள்ளி வைக்க பா.ஜனதா மேலிட தலைவர்கள் முடிவு செய்திருப்பதாக தெரிகிறது. இதுகுறித்து கதக்கில் போலீஸ் மந்திரி பசவராஜ் பொம்மையிடம் நிருபர்கள் கேள்வி எழுப்பினார்கள். இதற்கு பதிலளித்து அவர் கூறியதாவது:- கடந்த 2018-ம் ஆண்டு கர்நாடக சட்டசபைக்கு நடந்த தேர்தலில் பா.ஜனதா அதிக தொகுதிகளில் வெற்றி பெற்று தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்தது. பா.ஜனதா தான் ஆட்சிக்கு வர வேண்டும் என்று மக்கள் வாக்களித்திருந்தனர். ஆனால் மக்கள் விரும்பாத வகையில் காங்கிரஸ், ஜனதாதளம்(எஸ்) கட்சிகளின் கூட்டணி ஆட்சி அமைந்தது. தற்போது அந்த கூட்டணி ஆட்சி கவிழ்ந்து பா.ஜனதா அரசு அமைந்துள்ளது. மற்ற கட்சிகளில் இருந்து தங்களது எம்.எல்.ஏ. பதவியை ராஜினாமா செய்து விட்டு 17 பேர் பா.ஜனதாவுக்கு வந்ததால், முதல்-மந்திரி எடியூரப்பா தலைமையிலான அரசு அமைந்தது. அந்த 17 பேருக்கும் முதல்-மந்திரி எடியூரப்பா கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றுவார். ஆட்சி அமைய காரணமாக அவர்கள் இருந்ததால், மந்திரி பதவி வழங்கப்படுகிறது. இந்த சந்தர்ப்பத்தில் மூல பா.ஜனதாவினரையும் புறம் தள்ள முடியாது. மந்திரிசபை விரிவாக்கத்தில் எந்த பிரச்சினையும் இல்லை. எம்.எல்.ஏ.க்கள் இடையே கருத்து மோதல்கள் இருப்பதாக வரும் தகவல்களும் உண்மை அல்ல. மந்திரிசபை விரிவாக்கத்தில் முதல்-மந்திரி எடியூரப்பா, பா.ஜனதா மேலிட தலைவர்கள் எடுக்கும் முடிவே இறுதியானது. இந்த விவகாரத்தில் மேலிட தலைவர்கள் எடுக்கும் முடிவுக்கு அனைவரும் கட்டுப்படுவார்கள். இவ்வாறு அவர் கூறினார்.
Tags:    

Similar News