செய்திகள்
சந்திரபாபு நாயுடு

ஆந்திர சட்டசபையில் அமளி - சந்திரபாபு நாயுடு உள்பட 14 எம்.எல்.ஏ.க்கள் ஒருநாள் இடைநீக்கம்

Published On 2020-11-30 20:16 GMT   |   Update On 2020-11-30 20:16 GMT
ஆந்திர சட்டசபையில் அமளியில் ஈடுபட்ட சந்திரபாபு நாயுடு உள்பட தெலுங்கு தேசம் எம்.எல்.ஏ.க்கள் 14 பேரையும் ஒரு நாள் இடைநீக்கம் செய்து சபாநாயகர் தம்மினேனி உத்தரவிட்டார்.
அமராவதி:

ஆந்திரா சட்டசபையில் நேற்று குளிர்கால கூட்டத்தொடர் தொடங்கியது. அப்போது நிவர் புயலின் தாக்கம் குறித்தும், பாதிக்கப்பட்ட மக்களுக்கு வழங்க வேண்டிய நிவாரணங்கள் குறித்தும் விவாதிக்கப்பட்டது. அப்போது, தங்கள் கட்சியை சேர்ந்த எம்.எல்.ஏ.க்களுக்கு அவையில் பேசுவதற்கு போதுமான நேரம் ஒதுக்கவில்லை என முன்னாள் முதல்மந்திரியும், தெலுங்கு தேசம் கட்சியின் தலைவருமான சந்திரபாபு நாயுடு குற்றம் சாட்டினார்.

ஆனால் சபாநாயகர் தம்மினேனி சீதாராம் அதனை மறுத்தார். இதனால் கோபமடைந்த சந்திரபாபு நாயுடு தனது இருக்கையிலிருந்து எழுந்து அவையின் நடுவே சென்று சபாநாயகரின் இருக்கைக்கு முன்பாக அமர்ந்தார். அவரை பின்தொடர்ந்து தெலுங்கு தேசம் கட்சியை சேர்ந்த எம்.எல்.ஏ.க்கள் 13 பேரும் சபாநாயகரின் இருக்கைக்கு முன்பாக அமர்ந்தனர். சபாநாயகர் தம்மினேனி சீதாராம், சந்திரபாபு நாயுடு உள்பட 14 பேரையும் இருக்கைக்கு திரும்பும்படி மீண்டும் மீண்டும் வலியுறுத்தினார்.

ஆனால் அவர்கள் அதற்கு செவி சாய்க்காமல் தொடர்ந்து அமளியில் ஈடுபட்டனர். அப்போது முதல் மந்திரி ஜெகன்மோகன் ரெட்டி “நானும் எதிர்க்கட்சி தலைவராக இருந்து உள்ளேன். ஆனால் ஒருபோதும் சபாநாயகரின் இருக்கையை முன்பு அமர்ந்து அமளியில் ஈடுபட்டது இல்லை. எனவே அமளியில் ஈடுபடும் தெலுங்குதேசம் எம்.எல்.ஏ.க்கள் அனைவரையும் இடைநீக்கம் செய்து அவையில் இருந்து வெளியேற்ற வேண்டும்” எனக் கூறினார். அதனை தொடர்ந்து சபாநாயகர் தம்மினேனி சீதாராம் சந்திரபாபு நாயுடு உள்பட தெலுங்கு தேசம் எம்.எல்.ஏ.க்கள் 14 பேரையும் ஒரு நாள் இடைநீக்கம் செய்து உத்தரவிட்டார்.
Tags:    

Similar News