செய்திகள்
சிங்கு எல்லையில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள விவசாயிகள்

5வது நாளாக நீடிக்கும் விவசாயிகள் போராட்டம்- சிங்கு, திக்ரி எல்லைகள் மூடப்பட்டன

Published On 2020-11-30 06:49 GMT   |   Update On 2020-11-30 06:49 GMT
விவசாயிகளின் போராட்டம் தொடர்ந்து 5வது நாளாக நடைபெற்று வரும் நிலையில், டெல்லியின் 2 எல்லைகள் மூடப்பட்டன.
புதுடெல்லி:

மத்திய அரசு கொண்டு வந்த 3 வேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்புத் தெரிவித்து விவசாயிகள் 'டெல்லி சலோ' போராட்டத்தை முன்னெடுத்துள்ளனர். குறிப்பாக பஞ்சாப் மற்றும் அரியானாவைச் சேர்ந்த ஏராளமான விவசாயிகள் இதில் பங்கேற்றுள்ளனர். டெல்லியில் போராட்டம் நடத்தும் நோக்கில் வந்த விவசாயிகள் காவல்துறையால் எல்லைகளில் தடுத்து நிறுத்தப்பட்டனர். பின்னர் அவர்களுக்கு டெல்லி புராரி மைதானத்தில் போராட்டம் நடத்த அனுமதி அளிக்கப்பட்டது. அதனை ஏற்று குறிப்பிட்ட அளவு விவசாயிகள் அங்கு சென்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். 

அதேசமயம், ஜந்தர் மந்தர் பகுதியை தங்கள் போராட்டத்துக்கு ஒதுக்காமல், புராரி மைதானத்தை ஒதுக்கியதால் எல்லையிலேயே பெரும்பாலான விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். புராரி மைதானத்திற்கு அனைவரும் சென்றால் முன்கூட்டியே பேச்சுவார்த்தை நடத்தப்படும் என்று உள்துறை மந்திரி அமித் ஷா விடுத்த அழைப்பை விவசாயிகள் ஏற்க மறுத்து, எல்லைகளில் போராட்டத்தை தீவிரப்படுத்தி உள்ளனர். 

விவசாயிகளின் போராட்டம் இன்று 5வது நாளாக நீடிக்கிறது. விவசாயிகளின் போராட்டம் காரணமாக சிங்கு மற்றும் திக்ரி எல்லைகள் மூடப்பட்டன. எந்த வாகனங்களும் அந்த வழியாக செல்ல அனுமதிக்கப்படவில்லை. வாகனங்கள் மாற்றுப் பாதைகளில் திருப்பி விடப்பட்டன. 

டெல்லியை நோக்கி செல்லும் 5 நுழைவு பாதைகளையும் முடக்கப்போவதாக விவசாயிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். இதனால் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. 
Tags:    

Similar News