செய்திகள்
ஜெகதீஷ்ஷெட்டர்

பெலகாவி பாராளுமன்ற தொகுதி இடைத்தேர்தலில் ஜெகதீஷ்ஷெட்டர் போட்டியிட வாய்ப்பு

Published On 2020-11-30 01:54 GMT   |   Update On 2020-11-30 01:54 GMT
பெலகாவி பாராளுமன்ற தொகுதி இடைத்தேர்தலில் ஜெகதீஷ்ஷெட்டர் பா.ஜனதா சார்பில் போட்டியிட உள்ளதாகவும், அவருக்கு மத்திய மந்திரி பதவி வழங்க அக்கட்சி மேலிடம் முடிவு செய்திருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
பெலகாவி :

மத்திய ரெயில்வே துறை இணை மந்திரியாக பணியாற்றி வந்தவர் சுரேஷ் அங்கடி. இவர் பெலகாவி தொகுதியில் இருந்து பாராளுமன்றத்திற்கு தேர்ந்து எடுக்கப்பட்டார். கடந்த சில மாதங்களுக்கு முன்பு அவர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு மரணம் அடைந்தார். இதையடுத்து பாராளுமன்றத்தில் பெலகாவி தொகுதி காலியாக உள்ளது. அந்த தொகுதிக்கு விரைவில் இடைத்தேர்தல் தேதி அறிவிக்கப்பட உள்ளது. இந்த இடைத்தேர்தலை சந்திக்க பா.ஜனதா மற்றும் காங்கிரஸ் கட்சிகள் இப்போதே தயாராகி வருகின்றன.

பாராளுமன்ற இடைத்தேர்தலில் சுரேஷ் அங்கடியின் குடும்பத்தினர், தங்களில் யாருக்காவது ஒருவருக்கு டிக்கெட் வழங்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர். காங்கிரஸ் சார்பில் அக்கட்சியின் செயல் தலைவர்களில் ஒருவரான முன்னாள் மந்திரி சதீஸ் ஜார்கிகோளி நிறுத்தப்படுவார் என்று கூறப்படுகிறது. பழங்குடியின சமூகத்தை சேர்ந்த அவர் அந்த தொகுதியில் பிரபலமான தலைவராக திகழ்கிறார். அவரை வீழ்த்த செல்வாக்கான தலைவர் ஒருவரை நிறுத்த வேண்டிய நிலைக்கு பா.ஜனதா தள்ளப்பட்டுள்ளது.

அதனால் பெலகாவி தொகுதியில், தற்போது கர்நாடக அரசின் தொழில்துறை மந்திரியாக உள்ளவரும், முன்னாள் முதல்-மந்திரியுமான ஜெகதீஷ்ஷெட்டரை நிறுத்த பா.ஜனதா ஆலோசனை நடத்தி வருகிறது. லிங்காயத் சமூகத்தை சேர்ந்த ஜெகதீஷ்ஷெட்டர் வெற்றி பெற்றால் அவருக்கு மத்திய மந்திரி பதவி வழங்கவும் அக்கட்சி மேலிடம் திட்டமிட்டு உள்ளதாக கூறப்படுகிறது.

இதன் மூலம் கர்நாடகத்தில் பெரும்பான்மையாக உள்ள லிங்காயத் சமூகத்திற்கு மந்திரிசபையில் இடம் வழங்கவில்லை என்ற குறை நீங்கும் என்று அக்கட்சி கணக்கு போட்டுள்ளது. கர்நாடகத்தில் லிங்காயத் சமூகத்தின் ஆதரவு பா.ஜனதாவுக்கு அதிகமாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
Tags:    

Similar News