செய்திகள்
தெலுங்கானா முதல்வர் சந்திரசேகர ராவ்

இவர்கள் எல்லாம் நமக்கு பாடம் நடத்துவதா? -பாஜக தலைவர்கள் மீது சந்திரசேகர ராவ் பாய்ச்சல்

Published On 2020-11-29 10:42 GMT   |   Update On 2020-11-29 10:42 GMT
நாட்டை பிளவுபடுத்தும் சில சக்திகள் ஐதராபாத்தில் நுழைந்து அழிவை உருவாக்க முயற்சிப்பதாக முதல்வர் சந்திரசேகர ராவ் கூறி உள்ளார்.
ஐதராபாத்:

தெலுங்கானா மாநிலம் ஐதராபாத் மாநகராட்சி தேர்தல் டிசம்பர் 1ம் தேதி நடைபெற உள்ளது. இதற்கான இறுதிக்கட்ட பிரச்சாரத்தில் தலைவர்கள் ஈடுபட்டுள்ளனர். வெளிமாநிலங்களில் இருந்தும் தலைவர்கள் பிரச்சாரம் மேற்கொண்டனர். தெலுங்கானா ராஷ்டிர சமிதி தலைமையிலான அரசின் செயல்பாடுகளை, பாஜக தலைவர்களான யோகி ஆதித்யநாத், தேவேந்திர பட்னாவிஸ் உள்ளிட்டோர் விமர்சனம் செய்தனர். 

அவர்களுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் முதல்வர் சந்திரசேகர ராவ் பேசியதாவது:-

உ.பி. முதல்வர் இங்கு வந்துள்ளார். நமது மாநிலம் கடந்த 6 ஆண்டுகளுக்கு முன்பு தனிநபர் வருமானத்தில் 13ம் இடத்தில் இருந்தது. இப்போது, 5ம் இடத்திற்கு முன்னேறி உள்ளது. ஆனால் உத்தர பிரதேசம் 28 அல்லது 29வது இடத்தில் இருக்கிறது. அவர்கள் நமக்கு பாடம் நடத்துகிறார்கள். 

இதேபோல் மகாராஷ்டிர முன்னாள் முதல்வரும் (பட்னாவிஸ்) இங்கு வந்து பேசினார். அவர்கள் மாநிலம் தனிநபர் வருமானத்தில் 10வது இடத்தில் இருக்கிறது. அவர்கள், 5ம் இடத்தில் இருக்கும் நமக்கு பாடம் நடத்துகிறார்கள். 

நாட்டை பிளவுபடுத்தும் சில சக்திகள் ஐதராபாத்தில் நுழைந்து அழிவை உருவாக்க முயற்சிக்கின்றன. நாம் அதை அனுமதிக்கப் போகிறோமா? நாம் நமது அமைதியை இழக்கப் போகிறோமா? நம் குழந்தைகளின் எதிர்காலம் என்ன? தயவுசெய்து சிந்தியுங்கள். 

இவ்வாறு அவர் பேசினார்.
Tags:    

Similar News