செய்திகள்
எடியூரப்பா, சுத்தூர் மடாதிபதி சிவராத்திரி தேசிகேந்திரசுவாமி

பஞ்சலிங்க தரிசன விழா எளிமையாக நடத்தப்படும்: எடியூரப்பா அறிவிப்பு

Published On 2020-11-26 02:26 GMT   |   Update On 2020-11-26 02:26 GMT
பஞ்சலிங்க தரிசன விழா எளிமையாக நடத்தப்படும் என்றும், விழா நாட்களில் ஒருநாளைக்கு 1,000 பக்தர்களை மட்டுமே அனுமதிக்க முடிவு செய்யப்பட்டு இருப்பதாகவும் முதல்-மந்திரி எடியூரப்பா கூறினார்.
மைசூரு 

2 நாள் சுற்றுப்பயணமாக நேற்று முன்தினம் முதல்-மந்திரி எடியூரப்பா மைசூருவுக்கு வந்தார். நேற்று முன்தினம் இரவு மைசூருவிலேயே அவர் தங்கினார். நேற்று காலையில் அவர் மைசூரு மாவட்டம் நஞ்சன்கூடு தாலுகாவில் உள்ள சுத்தூர் மடத்திற்கு சென்றார். அங்கு மடாதிபதி சிவராத்திரி தேசிகேந்திர சுவாமியை சந்தித்து ஆசி பெற்றார். பின்னர் மடத்தின் வளாகத்தில் உள்ள தொட்டம்மாதாயி கோவிலில் அம்மன் சிலையை பிரதிஷ்டை செய்தார். அதன்பிறகு மடத்தில் தங்கும் விடுதி மற்றும் இதர வளர்ச்சிப் பணிகளை எடியூரப்பா தொடங்கி வைத்தார். இதில் சுத்தூர் மடத்தின் மடாதிபதி சிவராத்திரி தேசிகேந்திரசுவாமி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

அதையடுத்து டி.நரசிப்புரா தாலுகா முடுக்குதொரே கிராமத்தில் உள்ள மல்லிகார்ஜுனேஸ்வரர் கோவிலுக்கு எடியூரப்பா என்றார். அங்கு சாமி தரிசனம் செய்த அவர், கோவில் புனரமைப்பு பணியை பூஜைகள் செய்து தொடங்கி வைத்தார்.

பின்னர் அடுத்த மாதம் நடைபெற இருக்கும் தலக்காடு பஞ்சலிங்க தரிசனம் நிகழ்ச்சி தொடர்பாகவும், அதற்கான ஏற்பாடுகளை செய்ய வேண்டியது குறித்தும் அதிகாரிகளுடன் முதல்-மந்திரி எடியூரப்பா ஆலோசனை நடத்தினார். இந்த ஆலோசனை கூட்டத்தில் துணை முதல்-மந்திரி கோவிந்த் கார்ஜோள், போலீஸ் மந்திரி பசவராஜ் பொம்மை, மாவட்ட பொறுப்பு மந்திரி எஸ்.டி.சோமசேகர், பா.ஜனதா எம்.எல்.ஏ.க்கள், எம்.பி.க்கள் கலந்து கொண்டனர்.

கூட்டம் முடிந்த பிறகு முதல்-மந்திரி எடியூரப்பா நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

வரலாற்று சிறப்புமிக்க, பிரசித்திபெற்ற, ஆன்மிக தலங்களில் ஒன்றான தலக்காடுவில் அடுத்த மாதம்(டிசம்பர்) பஞ்சலிங்க தரிசனம் நடைபெற உள்ளது. இந்த விழாவில் பங்கேற்க லட்சக்கணக்கான பக்தர்கள் வருவார்கள். இருப்பினும் கொரோனா பரவலை தடுக்கும் விதமாக விழா நடைபெறும் நாட்களில் ஒரு நாளைக்கு தலா 1,000 பக்தர்களை மட்டுமே அனுமதிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இந்த ஆண்டு பஞ்சலிங்க தரிசன விழா எளிமையாக நடத்தப்பட உள்ளது. மேலும் விழாவை 5 நாட்கள் மட்டுமே நடத்த முடிவு செய்யப்பட்டு இருக்கிறது.

விழாவுக்கு தேவையான அனைத்து ஏற்பாடுகள் விரைவில் செய்யப்படும். தலக்காடு கிராமத்தில் வளர்ச்சி பணிகளை விரைந்து முடிக்க அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளேன். இருப்பினும் பணிகளை அவசர கதியில் மேற்கொள்ள வேண்டாம். பணிகள் அனைத்தும் தரமான முறையில் முடிக்கப்பட வேண்டும்.

பூஜைகள் செய்வது, சாமி தரிசனம் செய்வது போன்ற அனைத்தும் கொரோனா விதிமுறைகளுக்கு உட்பட்டு இருக்க வேண்டும். மணலால் மூடி இருக்கும் கோவில்களை சுத்தப்படுத்த வேண்டிய பணிகளை மட்டும் விரைந்து முடிக்க கூறி உத்தரவிட்டு இருக்கிறேன்.

இவ்வாறு எடியூரப்பா கூறினார்.

இதையடுத்து துணை முதல்-மந்திரி கோவிந்த் கார்ஜோள் பேசுகையில், “பஞ்சலிங்க தரிசன விழாவுக்கு தேவையான பணிகளை பொதுப்பணித்துறை அதிகாரிகள் விரைந்து முடிப்பார்கள். விழாவுக்காக ரூ.2.20 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது” என்றார். பேட்டியின்போது இந்து சமய அறநிலையத்துறை மந்திரி கோட்டா சீனிவாசபூஜாரி உள்பட எம்.எல்.ஏ.க்கள், எம்.பி.க்கள், பா.ஜனதா நிர்வாகிகள் பலர் உடனிருந்தனர்.
Tags:    

Similar News