செய்திகள்
தேஜஸ்வி யாதவ்

லாலு பிரசாத் மகன் பிறந்தநாள் கொண்டாட்டம் - தலைவர்கள் வாழ்த்து

Published On 2020-11-09 23:44 GMT   |   Update On 2020-11-09 23:44 GMT
பீகாரில் சட்டசபை தேர்தல் முடிவுகள் இன்று (செவ்வாய்க்கிழமை) வெளியாகும் நிலையில், நேற்று பிறந்தநாள் கொண்டாடிய லாலு பிரசாத்தின் மகனை, ‘முதல்-மந்திரி’ என அழைத்து பலரும் வாழ்த்தி உள்ளனர்.
பாட்னா:

பீகாரில் 3 கட்டங்களாக நடந்த சட்டசபை தேர்தலின் முடிவுகள் இன்று (செவ்வாய்க்கிழமை) வெளியாகின்றன. இதில் ஆளும் ஐக்கிய ஜனதாதளம்-பா.ஜனதா கூட்டணியை விட ராஷ்ட்ரீய ஜனதாதளம் தலைவர் லாலு பிரசாத்தின் மகன் தேஜஸ்வி தலைமையிலான மெகா கூட்டணி அதிக இடங்களை பெறும் என பெரும்பாலான கருத்துக்கணிப்புகள் கூறியுள்ளன.

இந்த மெகா கூட்டணியின் முதல்-மந்திரி வேட்பாளராக தேஜஸ்வி அறிவிக்கப்பட்டு உள்ளார். இந்த கூட்டணியில் காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் இடம்பெற்று உள்ளன.

இந்த நிலையில் தேஜஸ்வி தனது 31-வது பிறந்த நாளை நேற்று கொண்டாடினார். கொரோனா மற்றும் தேர்தல் முடிவுகளுக்காக காத்திருப்பு போன்றவற்றால் எளிய முறையில் அவர் தனது பிறந்த நாளை கொண்டாடினார். தனது குடும்பத்தினருடன் வீட்டிலேயே கேக் வெட்டி கொண்டாடி உள்ளார்.

தேஜஸ்வியின் பிறந்த நாளை தொண்டர்கள் கட்டுப்பாட்டுடன் கொண்டாடுமாறும், அவரை நேரில் சந்திக்க வரவேண்டாம் எனவும் கட்சித்தலைமை கேட்டுக்கொண்டிருந்தது. எனினும் அவரது வீட்டுமுன் ஏராளமான தொண்டர்கள் நேற்று கூடினர். எனினும் அவர்களை தேஜஸ்வி சந்திக்கவில்லை.

இதற்கிடையே பிறந்தநாள் கொண்டாடிய தேஜஸ்விக்கு காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி, லோக் ஜனசக்தி தலைவர் சிராக் பஸ்வான், ராஷ்ட்ரீய லோக் சமதா கட்சி தலைவர் குஷ்வாகா, முன்னாள் முதல்-மந்திரி ஜித்தன் ராம் மஞ்சி, முதல்-மந்திரிகள் பூபேஷ் பாகேல், ஹேமந்த் சோரன், கெஜ்ரிவால், சமாஜ்வாடி தலைவர் அகிலேஷ் யாதவ், ராஜஸ்தான் முன்னாள் துணை முதல்-மந்திரி சச்சின் பைலட் உள்பட ஏராளமான தலைவர்கள் வாழ்த்து தெரிவித்து உள்ளனர்.

பீகார் தேர்தலில் வெற்றி வாய்ப்பு இருப்பதாக தகவல் வெளியாகி இருப்பதை தொடர்ந்து, சமூக வலைத்தளத்தில் பலரும் முதல்-மந்திரி தேஜஸ்வி என ஹேஷ்டேக்கை உருவாக்கி வாழ்த்து தெரிவித்து உள்ளனர். இதில் தேஜஸ்வின் சகோதரர் தேஜ்பிரதாப், காங்கிரஸ் தலைவர் கீர்த்தி ஆசாத் போன்றவர்களும் வாழ்த்துகளை பகிர்ந்துள்ளனர்.
Tags:    

Similar News