செய்திகள்
வகுப்பறையில் சமூக இடைவெளியுடன் அமர்ந்திருக்கும் மாணவர்கள்

ஆந்திராவில் பள்ளிகள் திறக்கப்பட்ட நான்கே நாட்களில் இத்தனை பேருக்கு பாதிப்பா? அதிர்ச்சி தகவல்

Published On 2020-11-06 05:55 GMT   |   Update On 2020-11-06 05:55 GMT
ஆந்திராவில் பள்ளிகள் திறக்கப்பட்ட நான்கே நாட்களில் 829 ஆசிரியர்களுக்கும், 575 மாணவர்களுக்கும் கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
விஜயவாடா:

கொரோனா அச்சுறுத்தல் அதிகரிக்கத் தொடங்கியதால் நாடு முழுவதும் மார்ச் மாதம் முதல் ஊரடங்கு அறிவிக்கப்பட்டு பள்ளி கல்லூரிகள் திறக்கப்படாமல் இருந்தன. சமீபத்தில் ஊரடங்கு தளர்வுகள் அந்தந்த மாநில பாதிப்பு நிலவரத்திற்கு ஏற்ப மாநில அரசாங்கங்களால் அறிவிக்கப்பட்டு பின்பற்றப்படுகிறது. அதன்படி ஆந்திராவில் பல்வேறு தளர்வுகள் வழங்கப்பட்டு உள்ளன. பள்ளிகளும் நவம்பர் முதல் திறக்க அனுமதிக்கப்பட்டது. 

அதன்படி 9, 10-ம் வகுப்புகளுக்கு நவம்பர் 2-ந்தேதி முதல் பள்ளிகள் தொடங்கப்பட்டு உள்ளது. இவர்களுக்கு அரை நாட்கள் மட்டும் சுழற்சி முறையில் பள்ளிகள் செயல்படுகின்றன. ஆனால் பள்ளிகள் திறக்கப்பட்டதால் ஏராளமான மாணவர்களுக்கும் ஆசிரியர்களுக்கும் கொரோனா தொற்று ஏற்பட்டிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. 

பள்ளிகள் திறக்கப்பட்ட நான்கே நாட்களில்  829 ஆசிரியர்களுக்கும், 575  மாணவர்களுக்கும் கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. அனைவரும் அரசு உயர்நிலைப் பள்ளிகளைச் சேர்ந்தவர்கள் ஆவர். 

மொத்தம் உள்ள 1.89 லட்சம் அரசுப்பள்ளி ஆசிரியர்களில் 70,790 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளதாகவும், இதில் 829 ஆசிரியர்களுக்கு தொற்று உறுதி செய்யப்பட்டிருப்பதாகவும் பள்ளிக்கல்வித்துறை தெரிவித்துள்ளது.

அதிகபட்சமாக கிழக்கு கோதாவரி மாவட்டத்தில் 172 ஆசிரியர்களுக்கு பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. ஸ்ரீகாகுளத்தில் 141 பேருக்கு பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. மாணவர்களைப் பொருத்தவரை இதுவரை 95,763 பேருக்கு பரிசோதனை செய்ததில் , 575 பேருக்கு பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.

பள்ளிகள் திறக்கப்பட்ட 4 நாட்களில் மட்டும் இத்தனை பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டிருப்பது பெற்றோர் மத்தியில் கலக்கத்தை ஏற்படுத்தி உள்ளது.
Tags:    

Similar News