செய்திகள்
கோப்புப்படம்

லடாக் பகுதி குறித்த சர்ச்சை : டுவிட்டர் நிறுவனத்துக்கு பாராளுமன்றக்குழு கண்டனம்

Published On 2020-10-28 19:14 GMT   |   Update On 2020-10-28 19:14 GMT
லடாக் பகுதி குறித்த சர்ச்சை விவகாரத்தில் டுவிட்டர் நிறுவனம் அளித்த விளக்கம் போதுமானதல்ல என பாராளுமன்ற கூட்டுக்குழு உறுப்பினர்கள் கண்டனம் தெரிவித்தனர்.
புதுடெல்லி:

டுவிட்டர் நிறுவனம் வெளியிட்டிருந்த இருப்பிட அமைப்பில், இந்தியாவின் லடாக்கை, சீனாவின் ஒரு பகுதியாக குறிப்பிடப்பட்டு இருந்தது. இதற்கு மத்திய அரசு கடும் கண்டனம் தெரிவித்து இருந்தது. மேலும் இது தொடர்பாக விளக்கம் அளிக்கவும் அறிவுறுத்தியது.

இந்த நிலையில் தகவல் பாதுகாப்பு மசோதா-2019 தொடர்பாக டுவிட்டர் பிரதிநிதிகள் குழு ஒன்று பாராளுமன்ற கூட்டுக்குழு முன் ஆஜராகியது. அப்போது லடாக் சர்ச்சை குறித்து அவர்களிடம் விசாரணை நடத்தப்பட்டது. அப்போது, இந்த விவகாரத்தில் டுவிட்டர் நிறுவனம் அளித்த விளக்கம் போதுமானதல்ல என பாராளுமன்ற கூட்டுக்குழு உறுப்பினர்கள் ஒட்டுமொத்தமாக கண்டனம் தெரிவித்தனர்.

அப்போது, இந்தியாவின் உணர்வுகளுக்கு டுவிட்டர் நிறுவனம் மதிப்பளிப்பதாக அந்த பிரதிநிதிகள் கூறினர். ஆனால் இது இந்தியாவின் உணர்வு மட்டுமின்றி, இறையாண்மை மற்றும் ஒருமைப்பாடு சார்ந்தது என குழு தலைவர் மீனாட்சி லெகி கூறினார். மேலும் இது 7 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை பெறக்கூடிய குற்றம் எனவும் அவர் தெரிவித்தார்.
Tags:    

Similar News