செய்திகள்
கோப்புப்படம்

என் தந்தை பஸ்வானை அவமதித்தார், நிதிஷ்குமார் - சிராக் பஸ்வான் குற்றச்சாட்டு

Published On 2020-10-16 01:17 GMT   |   Update On 2020-10-16 01:17 GMT
என் தந்தை பஸ்வானை நிதிஷ்குமார் அவமதித்தார். எங்கள் கட்சி வேட்பாளர்களுக்கு எதிராக செயல்பட்டார் என்று சிராக் பஸ்வான் குற்றம் சாட்டினார்.
பாட்னா:

பீகார் சட்டசபை தேர்தலையொட்டி, ஐக்கிய ஜனதாதளத்துடன் ஏற்பட்ட மோதலால், மறைந்த ராம்விலாஸ் பஸ்வானின் லோக் ஜனசக்தி கட்சி, அந்த கூட்டணியில் இருந்து விலகி தனித்துப் போட்டியிடுகிறது. அதே சமயத்தில், மத்தியில் தேசிய ஜனநாயக கூட்டணியில் நீடிக்கிறது. சமீபத்தில், பஸ்வான் மறைந்தார்.

இந்த நிலையில், பஸ்வான் மகனும், லோக் ஜனசக்தி கட்சி தலைவருமான சிராக் பஸ்வான் எம்.பி., ஐக்கிய ஜனதாதள தலைவரும், முதல்-மந்திரியுமான நிதிஷ்குமாரை கடுமையாக விமர்சித்துள்ளார்.

அவர் ஒரு செய்தி நிறுவனத்துக்கு அளித்த பேட்டி வருமாறு:-

ஐக்கிய ஜனதாதளத்திடம் இருந்து நாங்கள் விலகியதற்கு தொகுதி பங்கீடு காரணம் அல்ல. நிதிஷ்குமாரின் அரசியலை நாங்கள் எப்போதும் எதிர்த்து வந்திருக்கிறோம்.

கடந்த ஆண்டு நாடாளுமன்ற தேர்தலில், நிர்ப்பந்தம் காரணமாகவே அவரது கட்சியுடன் கூட்டணி சேர்ந்து போட்டியிட்டோம். ஆனால், அவர் கூட்டணி தர்மத்தை மீறி, எங்கள் கட்சி வேட்பாளர்களுக்கு எதிராக செயல்பட்டார்.

கடந்த ஆண்டு என் தந்தை மாநிலங்களவை தேர்தலுக்கு வேட்புமனு தாக்கல் செய்ய தன்னுடன் வருமாறு நிதிஷ்குமாரை அழைத்தார்.

ஆனால், அவர் வேண்டுமென்றே நல்ல நேரம் முடிந்த பிறகு வந்து என் தந்தையை அவமதித்தார். எந்த மகனும் இத்தகைய அவமதிப்பை தாங்க மாட்டான்.

ஐக்கிய ஜனதாதளத்தின் ஆதரவு இல்லாமல், பஸ்வான் மாநிலங்களவைக்கு தேர்ந்தெடுக்கப்பட்டிருக்க மாட்டார் என்று நிதிஷ்குமார் சமீபத்தில் கிண்டலாக தெரிவித்தார்.

ஆனால், என் தந்தைக்கு மாநிலங்களவை சீட் தருவதாக பா.ஜனதா தலைவராக இருந்த அமித்ஷா உறுதி அளித்ததை நிதிஷ்குமார் நினைவில் கொள்ள வேண்டும்.

ஊழல், குற்ற செயல்கள், வகுப்புவாதம் ஆகியவற்றை சகித்துக் கொள்ள மாட்டேன் என்று நிதிஷ்குமார் கூறுகிறார். ஆனால், ஒவ்வொரு திட்ட அமலாக்கத்திலும் ஊழல் நடந்து வருகிறது. பெண்ணை பலாத்காரம் செய்து உயிருடன் எரித்துக்கொன்ற சம்பவங்களும் நடந்து வருகின்றன.

இவ்வாறு அவர் கூறினார்.
Tags:    

Similar News