செய்திகள்
நடிகை சஞ்சனா

போதைப்பொருள் விவகாரத்தில் கைதான நடிகை சஞ்சனா 11 வங்கிக்கணக்குகள் வைத்திருந்தது அம்பலம்

Published On 2020-10-01 02:05 GMT   |   Update On 2020-10-01 02:05 GMT
போதைப்பொருள் விவகாரத்தில் கைதான நடிகை சஞ்சனா 11 வங்கிக்கணக்குகள் வைத்திருந்தது அம்பலமாகி உள்ளது. கைது செய்யப்படுவதற்கு முன்பு வங்கிக்கணக்குகளில் இருந்த பணத்தை சஞ்சனா எடுத்து உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளது.
பெங்களூரு :

கன்னட திரையுலகினர் போதைப்பொருள் பயன்படுத்திய விவகாரம் குறித்து, மத்திய குற்றப்பிரிவு இணை போலீஸ் கமிஷனர் சந்தீப் பட்டீல் தலைமையிலான போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த விவகாரத்தில் ஏற்கனவே கன்னட நடிகைகள் ராகிணி திவேதி, சஞ்சனா கல்ராணி, இவர்களது நண்பர்கள் ரவிசங்கர், ராகுல், போதைப்பொருட்கள் விற்பனையாளர்கள் லோயம் பெப்பர் சம்பா, வீரேன் கண்ணா, வைபவ் ஷெட்டி, பிரதிக் ஷெட்டி உள்பட 14-க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டனர். மேலும் நடிகைகள் ராகிணி திவேதி, சஞ்சனா கல்ராணி உள்பட 14 பேர் மீது போதைப்பொருள் தடுப்பு சட்டத்தின் கீழ் காட்டன்பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து உள்ளனர்.

இந்த விவகாரத்தில் கைதான நடிகைகள் 2 பேரும் பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் அடைக்கப்பட்டு உள்ளனர். இந்த நிலையில் நடிகைகள் 2 பேரும் வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாகவும், வெளிநாட்டுக்கு பண பரிமாற்றத்தில் ஈடுபட்டதாகவும், பிட் காயின் வணிக நடவடிக்கையில் ஈடுபட்டதாகவும் குற்றச்சாட்டு எழுந்தது. அதன்பேரில் கோர்ட்டு அனுமதி பெற்று சிறையில் உள்ள நடிகைகளிடம் அமலாக்கத்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்த நிலையில் நடிகை சஞ்சனா கல்ராணி 11 வங்கிகளில் கணக்கு வைத்திருப்பது, அமலாக்கத்துறையினருக்கு தெரியவந்தது. அந்த வங்கிக்கணக்குகளை அமலாக்கத்துறையினர் ஆய்வு செய்த போது 11 வங்கி கணக்குகளிலும் ரூ.40 லட்சம் தான் இருப்பது தெரியவந்து உள்ளது. அதாவது போதைப்பொருள் வழக்கில் கைது செய்யப்படுவதற்கு முன்பு 11 வங்கிக்கணக்குகளிலும் ஏராளமான பணம் இருந்து உள்ளது. ஆனால் கைது செய்யப்படுவதற்கு முன்பு வங்கிக்கணக்குகளில் இருந்த பணத்தை சஞ்சனா எடுத்து உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளது.

சஞ்சனா கல்ராணியின் வங்கிக்கணக்குகளுக்கு பணம் அனுப்பியது யார்? என்பது குறித்தும் அமலாக்கத்துறையினர் விசாரித்து வருகின்றனர். மேலும் சஞ்சனாவின் வங்கிக்கணக்குகளை முடக்க அமலாக்கத்துறையினர் முடிவு செய்ததாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளது.

இந்த நிலையில் சொத்து மதிப்பு உள்ளிட்ட சில தகவல்கள் குறித்து சஞ்சனாவிடம், அமலாக்கத்துறையினர் விசாரித்த போது, தான் சம்பாதித்த பணத்தை பெங்களூரு சிவாஜிநகரில் நகைக்கடை நடத்தி வந்த மன்சூர்கானின், நிதி நிறுவனத்தில் முதலீடு செய்ததாகவும், அவர் பணத்தை மோசடி செய்து விட்டதாகவும், தனது நண்பர்கள் முதலீடு செய்த பணத்தையும் மோசடி செய்து விட்டதாகவும் சஞ்சனா கூறியதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

மேலும் சஞ்சனாவின் செல்போனில் பாலியல் தொடர்பான ஒரு வாட்ஸ்-அப் குழு இருந்ததாகவும், சஞ்சனா கைதான பின்னர் அந்த குழு கலைக்கப்பட்டு விட்டதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது.
Tags:    

Similar News