செய்திகள்
ராகுல் காந்தி, மன்மோகன் சிங்

முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் பிறந்தநாள்- ராகுல் காந்தி வாழ்த்து

Published On 2020-09-26 06:29 GMT   |   Update On 2020-09-26 07:32 GMT
முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்கின் நேர்மை, கண்ணியம் மற்றும் அர்ப்பணிப்பு நம் அனைவருக்கும் உத்வேகம் அளிக்கிறது என ராகுல் காந்தி குறிப்பிட்டுள்ளார்.
புதுடெல்லி:

முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் இன்று 88வது பிறந்தநாளைக் கொண்டாடுகிறார். இதையொட்டி அவருக்கு பல்வேறு அரசியல் தலைவர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர். அவரது சாதனைகளை பலரும் பகிர்ந்தவண்ணம் உள்ளனர்.

காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவரும் எம்.பி.யுமான ராகுல் காந்தி டுவிட்டரில் மன்மோகன் சிங்கிற்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளார். 

அதில், ‘மன்மோகன் சிங் போன்ற ஒரு பிரதமர் இல்லாததை இந்தியா உணர்கிறது. அவரது நேர்மை, கண்ணியம் மற்றும் அர்ப்பணிப்பு நம் அனைவருக்கும் உத்வேகம் அளிக்கிறது’ என ராகுல் குறிப்பிட்டுள்ளார். 

காங்கிரஸ் கட்சி சார்பிலும் மன்மோகன் சிங்கிற்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவிக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு இந்தியரின் நல்வாழ்விற்காக எப்போதும் உறுதியுடன் இருந்த அர்ப்பணிப்புள்ள தலைவர் டாக்டர் மன்மோகன் சிங் என காங்கிரஸ் பாராட்டி உள்ளது. அவரது சாதனைகளை பட்டியலிட்டு ஒரு வீடியோவையும் காங்கிரஸ் கட்சி வெளியிட்டுள்ளது.

டாக்டர் மன்மோகன் சிங், நாட்டின் பிரதமராக இருந்த காலத்தில் நல்லாட்சி மற்றும் இந்திய பொருளாதாரத்தை வலுப்படுத்தியதாக  குஜராத் காங்கிரஸ் தலைவர் ஹர்திக் பட்டேல் பாராட்டு தெரிவித்துள்ளார்.

காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசில் கடந்த 2004-2014 வரை, இந்தியாவின் பிரதமராக மன்மோகன் சிங் பதவி வகித்தார்.

மன்மோகன் சிங் 1932ஆம் ஆண்டு செப்டம்பர் 26 ஆம் தேதி தற்போதைய பாகிஸ்தானில் உள்ள பஞ்சாப் மாகாணத்தில் பிறந்தார். பஞ்சாப் பல்கலைக்கழகம், கேம்ப்ரிட்ஜ் பல்கலைக்கழகம் மற்றும் ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகம் ஆகியவற்றில் பயின்றுள்ள இவர் பொருளாதாரத்தில் டாக்டர் பட்டம் பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.
Tags:    

Similar News