செய்திகள்
சித்தராமையா

அரசின் ஊழலுக்கு நாங்கள் ஒத்துழைப்பு கொடுக்க வேண்டுமா?: சித்தராமையா கேள்வி

Published On 2020-09-24 02:03 GMT   |   Update On 2020-09-24 02:03 GMT
கொரோனா தடுப்பு மருத்துவ உபகரணங்கள் கொள்முதலில் முறைகேடு நடந்துள்ளது உண்மை. நடந்த ஊழலை மூடிமறைக்க நீங்கள் கூறும் காரணங்களை எங்களால் ஏற்க முடியாது என்று சட்டசபையில் சித்தராமையா கூறியுள்ளார்.
பெங்களூரு :

கர்நாடக சட்டசபையில் நேற்று கொரோனா தடுப்பு மருத்துவ உபகரணங்கள் கொள்முதல் குறித்த விவாதத்திற்கு மருத்துவ கல்வித்துறை மந்திரி சுதாகர் பதிலளித்தார். அதன் பிறகு அந்த பதில் திருப்தி அளிக்கவில்லை என்று கூறி சித்தராமையா பேசும்போது கூறியதாவது:-

கொரோனவை தடுக்கவும், மக்களை காப்பாற்றவும் அரசு எடுக்கும் நடவடிக்கைகளுக்கு எதிர்க்கட்சிகள் ஒத்துழைப்பு கொடுக்க வேண்டும் என்றும், சிறப்பாக பணியாற்றி வரும் அதிகாரிகளை எதிர்க்கட்சிகள் விமர்சிப்பது சரியல்ல என்றும் மந்திரி சுதாகர் கூறுகிறார். கொரோனா நெருக்கடியில் மக்களை காக்க அரசு எடுக்கும் நடவடிக்கைகளுக்கு நாங்கள் கடந்த பிப்ரவரி மாதம் முதல் ஜூலை 13-ந் தேதி வரை ஒத்துழைப்பு கொடுத்தோம்.

ஆனால் கொரோனாவை தடுக்கிறோம் என்ற பெயரில் மருத்துவ உபகரணங்கள் கொள்முதலில் நடக்கும் முறைகேடுகளை நாங்கள் வேடிக்கை பார்க்க வேண்டுமா?. அவற்றுக்கு வாயை மூடிக்கொண்டு ஒத்துழைப்பு கொடுக்க வேண்டுமா?. மத்திய அரசு செயற்கை சுவாச கருவிகளை ரூ.4 லட்சத்திற்கு வாங்கியுள்ளது. நீங்கள் ரூ.18 லட்சம் கொடுத்து அந்த கருவிகளை வாங்கியது ஏன்?. விலையில் ஏன் இவ்வளவு வித்தியாசம்?.

நீங்கள், நாங்கள் வாங்கிய கருவி தரமானது என்று சொல்கிறீர்கள். அப்படி என்றால் மத்திய அரசு வழங்கியுள்ள செயற்கை சுவாச கருவி தரமற்றதா?. தமிழக அரசு தலா ரூ.4.80 லட்சம் கொடுத்து 100 செயற்கை சுவாச கருவிகளை வாங்கியுள்ளது. அவை தரமற்றதா?. கர்நாடக அரசு, ஏற்கனவே பயன்படுத்திய செயற்கை சுவாச கருவியை புதியது போல் வாங்கியுள்ளதாக லோக்அயுக்தாவில் பா.ஜனதாவை சேர்ந்த ஒருவரே புகார் கொடுத்துள்ளார். இதற்கு என்ன சொல்கிறீர்கள்?.

அதனால் கொரோனா தடுப்பு மருத்துவ உபகரணங்கள் கொள்முதலில் முறைகேடு நடந்துள்ளது உண்மை. நீங்கள் தவறு செய்யவில்லை என்றால் எதற்காக நீதி விசாரணைக்கு உத்தரவிட பயப்படுகிறீர்கள். நீதி விசாரணை நடைபெறட்டும், உண்மைகள் வெளிவந்து அது மக்களுக்கு தெரியட்டும். நடந்த ஊழலை மூடிமறைக்க நீங்கள் கூறும் காரணங்களை எங்களால் ஏற்க முடியாது.

இவ்வாறு சித்தராமையா கூறினார்.
Tags:    

Similar News