செய்திகள்
மாநிலங்களவை

எதிர்க்கட்சி எம்.பி.க்கள் தொடர் அமளி- மாநிலங்களவை நாள் முழுவதும் முடங்கியது

Published On 2020-09-21 07:28 GMT   |   Update On 2020-09-21 07:28 GMT
மாநிலங்களவையில் இருந்து எம்.பி.க்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டதை ஏற்க மறுத்து எதிர்க்கட்சி எம்.பி.க்கள் தொடர்ந்து அமளியில் ஈடுபட்டதால் நாள் முழுவதும் அவை நடவடிக்கை முடங்கியது.
புதுடெல்லி:

பாராளுமன்ற மழைக்கால கூட்டத்தொடரில் மத்திய அரசு கொண்டு வந்துள்ள வேளாண் மசோதாக்களுக்கு எதிர்க்கட்சிகள் தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். 

மக்களவையில் 3 வேளாண் மசோதாக்களும் நிறைவேற்றப்பட்ட நிலையில், அதில் 2 முக்கிய மசோதாக்கள் மாநிலங்களவையில் நேற்று நிறைவேற்றப்பட்டன. மாநிலங்களவையில் அரசுக்கு போதிய ஆதரவு இல்லாத நிலையில், குளறுபடி செய்து குரல் வாக்கெடுப்பு நடத்தி மசோதாவை நிறைவேற்றியதாக எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டின. அத்துடன், அவையை வழிநடத்திய துணைத்தலைவர் ஹரிவன்சுக்கு எதிராக நம்பக்கையில்லா தீர்மானம் கொண்டு வருவதற்காக மனு அளித்தனர்.

இந்த பரபரப்பான சூழ்நிலையில் மாநிலங்களவை இன்று காலை 9 மணிக்கு மீண்டும் கூடியது. அப்போது, நேற்று அவையில் அமளியில் ஈடுபட்ட எதிர்க்கட்சிகளின் 8 உறுப்பினர்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர். அத்துடன், துணை சபாநாயகர் மீது எதிர்க்கட்சிகள் அளித்த நம்பிக்கையில்லா தீர்மானத்தையும் அவைத்தலைவர் வெங்கையா நாயுடு நிராகரித்தார். 

இதனைக் கண்டித்து எதிர்க்கட்சி எம்பிக்கள் தொடர்ந்து அமளியில் ஈடுபட்டனர். அவையின் மையப்பகுதிக்கு வந்து முழக்கங்கள் எழுப்பினர். அத்துடன் சஸ்பெண்ட் செய்யப்பட்ட உறுப்பினர்கள் உடனடியாக அவையை விட்டு வெளியேறவும் மறுத்துவிட்டனர். 

உறுப்பினர்களின் அமளி காரணமாக இன்று எந்த அலுவலும் நடைபறவிலை. மதியம் 12 மணிக்குள் 4 முறை அவை ஒத்திவைக்கப்பட்டது. 12 மணிக்கு அவை கூடியபோதும், உறுப்பினர்கள் அமளி நீடித்தது. இதனால் நாளை காலை 9 மணி வரை அவை ஒத்திவைக்கப்பட்டது.
Tags:    

Similar News