செய்திகள்
ராணுவ மந்திரி ராஜ்நாத் சிங்

எதிர்க்கட்சி உறுப்பினர்கள் நடந்து கொண்ட விதம் வெட்கக்கேடானது - ராஜ்நாத் சிங் கடும் குற்றச்சாட்டு

Published On 2020-09-20 23:09 GMT   |   Update On 2020-09-20 23:09 GMT
வேளாண் மசோதாக்கள் நிறைவேற்றும்போது மாநிலங்களவையில் எதிர்க்கட்சிகள் நடந்து கொண்ட விதம் வெட்கக்கேடானது என ராஜ்நாத் சிங் கடுமையாக குற்றம் சாட்டியுள்ளார்.
புதுடெல்லி:

மத்திய அரசின் வேளாண் மசோதாக்கள் மாநிலங்களவையிலும் நேற்று நிறைவேறியது. இந்த மசோதாக்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து எதிர்க்கட்சிகள் அவையில் கடும் அமளியில் ஈடுபட்டன. மசோதாக்களின் நகல்களை கிழித்தெறிந்த அவர்கள், அவை துணைத்தலைவர் ஹரிவன்சை நோக்கி பாய்ந்தனர்.

இந்த நடவடிக்கைகளால் அவையில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. எதிர்க்கட்சிகளின் இந்த செயலுக்கு ஆளும் பா.ஜனதா தரப்பில் இருந்து கடும் எதிர்ப்பு கிளம்பி உள்ளது. இந்த சம்பவத்தை தொடர்ந்து ராணுவ மந்திரி ராஜ்நாத் சிங் தலைமையில் மத்திய மந்திரிகள் சிலர் அவசர அவசரமாக செய்தியாளர்களை சந்தித்தனர்.

அப்போது ராஜ்நாத் சிங் கூறியதாவது:-

விவசாயிகளின் விளைபொருட்களுக்கான குறைந்தபட்ச ஆதரவு விலை போன்றவை தொடர்ந்து இருக்கும். அவற்றை ஒருபோதும் நீக்க முடியாது. இன்று (நேற்று) மாநிலங்களவையில் நிறைவேற்றப்பட்ட வேளாண் மசோதாக்கள் விவசாயிகளின் நலனை பாதுகாக்கும். தங்கள் விளைபொருட்களை அவர்கள் நாட்டின் எந்த பகுதியிலும் விற்க முடியும்.

நாடாளுமன்றத்தில் விவாதத்துக்கு வழி ஏற்படுத்த வேண்டியது ஆளுங்கட்சியின் பொறுப்பு. ஆனால் அவையில் ஒழுக்கத்தை பராமரிக்க வேண்டியது எதிர்க்கட்சிகளின் கடமை ஆகும்.

ஆனால் மாநிலங்களவையில் இன்று (நேற்று) நடந்தது அனைத்தும் வருத்தத்துக்கு உரியது, துரதிர்ஷ்டவசமானது மற்றும் வெட்கக்கேடானது ஆகும். அவையை நடத்தியவருடன் (துணைத்தலைவர்) எதிர்க்கட்சிகள் தவறாக நடந்து கொண்டதை, சட்ட புத்தகத்தை கிழித்ததை, மேடையில் ஏறியதை அனைவரும் பார்த்தனர்.

இந்த நடவடிக்கைகளுக்காக வருந்துகிறேன். இதுபோன்ற ஒழுக்கமற்ற செயல்களை நாடாளுமன்ற வரலாற்றில் இதற்கு முன் நான் கண்டதில்லை. அவைத்தலைவரின் நடவடிக்கைகள் எதிர்க்கட்சியினருக்கு பிடிக்கவில்லை என்றால், வன்முறையில் ஈடுபடலாமா? அவைத்தலைவரை தாக்கலாமா?

இவ்வாறு ராஜ்நாத் சிங் கேள்வி எழுப்பினார்.

முன்னாள் மத்திய மந்திரி ஹர்சிம்ரத் கவுர் பாதலின் ராஜினாமா குறித்த கேள்விக்கு அவர் பதிலளிக்கையில், ‘இதுபோன்ற ஒவ்வொரு முடிவுக்கு பின்னாலும் சில அரசியல் காரணங்கள் இருக்கும். அந்த வகையில் எதற்காக அவர் இந்த முடிவை எடுத்தார்? என்பது குறித்து கருத்து தெரிவிக்க விரும்பவில்லை’ என்று கூறினார்.
Tags:    

Similar News