செய்திகள்
குமாரசாமி

போதைப்பொருள் விவகாரத்தில் அரசியல்வாதிகளுக்கு தொடர்பு: குமாரசாமி

Published On 2020-09-18 01:58 GMT   |   Update On 2020-09-18 01:58 GMT
போதைப்பொருள் விவகாரத்தில் அரசியல்வாதிகள், அதிகாரிகளுக்கும் தொடர்பு உள்ளதாக குமாரசாமி பரபரப்பு தகவலை வெளியிட்டுள்ளார்.
பெங்களூரு :

முன்னாள் முதல்-மந்திரி குமாரசாமி பெங்களூருவில் நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில் கூறியதாவது:-

எனக்கு அதிகார போதை எப்போதும் இருப்பது இல்லை. எச்.விஸ்வநாத் பற்றி பேசினால், என்னை நானே தரம் தாழ்த்தி கொள்வதற்கு சமம். ரூ.25 ஆயிரம் கோடி சேகரித்து விவசாய கடனை தள்ளுபடி செய்தேன். தொழிற்பேட்டைகளை உருவாக்க அனுமதி வழங்கினேன். நான் முதல்-மந்திரி பதவியில் இருந்த காலம் மிக குறைவு. ஆனால் அந்த காலக்கட்டத்தில் கள்ளச்சாராயம், லாட்டரி போன்றவற்றை தடுத்து நிறுத்தினேன். கர்நாடகத்தின் வளர்ச்சியில் எனது பங்கு முக்கியமானது.

நடன விடுதி, இரவு விடுதிகளில் போதைப்பொருள் நடமாட்டம் அதிகமாக உள்ளது. சில நட்சத்திர ஓட்டல்களில் அதிகாலை 4 மணி வரை விருந்து நிகழ்ச்சி நடக்கிறது. இத்தகைய நிகழ்ச்சிகளை நடத்துபவர்கள் யார், அதற்கு செலவு செய்பவர்கள் யார் என்பதை அரசு கண்டுபிடிக்க வேண்டும். போதைப்பொருள் விவகாரத்தில் தொடர்பு உடையவர்கள் பலர் அரசில் உள்ளனர். இந்த போதைப்பொருள் நடமாட்டத்திற்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டுமென்றால், சரியான முறையில் விசாரணை நடைபெற வேண்டும்.

தற்போது சில நடிகர்-நடிகைகளின் வீடுகளில் சோதனை நடத்தியுள்ளனர். அவர்கள் மட்டுமே இந்த போதைப்பொருள் விவகாரத்தில் ஈடுபட்டுள்ளார்களா?. இன்னும் பலர் இருக்கிறார்கள். போதைப்பொருள் விவகாரத்தில் அரசியல்வாதிகள் மற்றும் அதிகாரிகளுக்கு தொடர்பு உள்ளது. இதுகுறித்து விசாரணை நடைபெற வேண்டும். போதைப்பொருள் குறித்து சட்டசபையில் பிரச்சினை கிளப்ப மாட்டோம். அதனால் எந்த பயனும் இல்லை. டி.ஜே.ஹள்ளி கலவரம் குறித்து சட்டசபையில் விவாதிப்பதும் பயனற்றது.

பாதிக்கப்பட்ட எம்.எல்.ஏ.வே முடிந்துவிட்டது என்று கூறியுள்ளார். இந்த கலவரத்தில் காங்கிரசாரே ஈடுபட்டுள்ளனர் என்பது அனைவருக்கும் தெரிந்துவிட்டது. இதுபற்றி அக்கட்சி தலைவர்கள் என்ன சொல்கிறார்கள். இந்த அரசு சென்று கொண்டிருக்கும் பாதையை பார்க்கும்போது, இதை கடவுள் தான் காப்பாற்ற வேண்டும். மத்திய மந்திரி நிர்மலா சீதாராமன் கூறியது போல் கடவுள் தான் காப்பாற்ற வேண்டும்.

இவ்வாறு குமாரசாமி கூறினார்.
Tags:    

Similar News