செய்திகள்
பிறந்தநாள் கொண்டாட்டம்

கொரோனா பாதித்த பெற்றோருக்கு சிகிச்சை- சிறுவனின் பிறந்தநாளை கொண்டாடிய போலீசார்

Published On 2020-09-17 05:15 GMT   |   Update On 2020-09-17 05:15 GMT
கொரோனா பாதித்த போலீஸ்காரர், அவரது மனைவி சிகிச்சை பெற்று வருவதால், அவர்களது 7 வயது மகனின் பிறந்தநாளை போலீசார் உற்சாகமாக கொண்டாடினர்.
தானே:

தானேயை சேர்ந்த போலீஸ்காரர் மற்றும் அவரது மனைவிக்கு சமீபத்தில் கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து இருவரும் சிகிச்சைக்காக ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டனர்.

இதற்கிடையில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட போலீஸ்காரர், “தனது 7 வயது மகனுக்கு பிறந்தநாள் வருவதாகவும், அதை கொண்டாட முடியாத நிலையில் தானும், தனது மனைவியும் கொரோனா சிகிச்சையில் இருப்பது வருத்தத்தை அளிப்பதாகவும்” டுவிட்டரில் தெரிவித்து இருந்தார்.

இதனை கண்ட ஷில் டைகர் போலீஸ் இன்ஸ்பெக்டர் சந்திரகாந்த் ஜாதவ் மற்றும் போலீசார் சிறுவனின் பிறந்த நாளை கொண்டாட முடிவு செய்தனர்.

இதன்படி திவா டவுண், கார்ட்டி பாடாவில் உள்ள சிறுவனின் வீட்டிற்கு போலீசார் சென்றனர். சிறுவனை மகிழ்விக்க பொம்பை துப்பாக்கி, விளையாட்டு பொருட்கள் போன்றவற்றை பரிசாக கொடுத்தனர்.

பின்னர் அக்கம்பக்கத்தினருடன் சேர்ந்து சிறுவனின் பிறந்தநாளை கேக் வெட்டி போலீசார் உற்சாகமாக கொண்டாடினர்.

இது பற்றி போலீஸ் இன்ஸ்பெக்டர் சந்திரகாந்த் ஜாதவ் தெரிவிக்கையில், “ஆரம்பத்தில் சிறுவன் எங்களை கண்டு பயந்தான். பின்னர் படிப்படியாக சிறுவன் எங்களுடன் உற்சாகமாக பிறந்தநாள் கொண்டாடியதுடன், இதற்காக அவன் தங்களுக்கு நன்றி தெரிவித்தான்” என தெரிவித்தார்.

பிறந்தநாள் கொண்டாடிய சிறுவனின் புகைப்படத்தை கொரோனா பாதித்த தந்தையின் டுவிட்டர் கணக்கில் போலீசார் பதிவேற்றம் செய்திருந்தனர்.
Tags:    

Similar News