செய்திகள்
கோப்பு படம்

இந்திய மருந்து கட்டுப்பாட்டு அமைப்பு அனுமதி கொடுத்தால் நிறுத்தப்பட்ட தடுப்பூசி பரிசோதனையை மீண்டும் தொடங்குவோம் - சீரம் இன்ஸ்டிடியூட்

Published On 2020-09-12 17:06 GMT   |   Update On 2020-09-12 17:06 GMT
இந்திய மருந்து கட்டுப்பாட்டு அமைப்பு அனுமதி கொடுத்தால் நிறுத்தப்பட்ட தடுப்பூசி பரிசோதனையை உடனடியாக மீண்டும் தொடங்குவோம் என சீரம் இன்ஸ்டிடியூட் தெரிவித்துள்ளார்.
புதுடெல்லி:   

கொரோனா வைரசை கட்டுப்படுத்துவதற்காக இங்கிலாந்து நாட்டின் ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகம், இங்கிலாந்து அரசு மற்றும் அஸ்ட்ரா ஜெனேகா மருந்து நிறுவனத்துடன் இணைந்து ஒரு தடுப்பூசியை உருவாக்கி உள்ளது. இந்த ஆக்ஸ்போர்டு தடுப்பூசியின் 1 மற்றும் 2 ஆம் கட்ட மனித பரிசோதனையில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டது.

இதையடுத்து, இந்த தடுப்பூசியை மனிதர்களுக்கு செலுத்தி பார்க்கும் இறுதிகட்ட மருத்துவ பரிசோதனை இங்கிலாந்தில் முழுவீச்சில் நடைபெற்று வந்தது. 

ஆனால், இங்கிலாந்தில் இந்த தடுப்பூசி செலுத்தப்பட்ட ஒரு நபருக்கு முதுகு தண்டுவடத்தில் பாதிப்பு ஏற்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. 
இந்த பக்கவிளைவு காரணமாக இங்கிலாந்து நாட்டில் இந்த ஆக்ஸ்போர்டு தடுப்பூசியின் பரிசோதனை தற்காலிகமாக நிறுத்திவைக்கப்பட்டிருந்தது.

இதற்கிடையில், இங்கிலாந்தின் ஆக்ஸ்போர்டு தடுப்பூசியை இந்தியாவில் தயாரிக்கும் உரிமையை இந்திய சீரம் இன்ஸ்டிடியூட் பெற்றுள்ளது. 
இந்தியாவில் ‘கோவிஷீல்டு’ என்று பெயரிடப்பட்டுள்ள இந்த தடுப்பூசியை மனிதர்களுக்கு செலுத்தும் பரிசோதனையில் முதல் கட்டம் நிறைவடைந்துள்ளன.

மேலும், இந்த ’கோவிஷீல்டு’ தடுப்பூசியின் 2 மற்றும் 3-ம் கட்ட பரிசோதனைக்கு  இந்திய மருந்து கட்டுப்பாட்டு அமைப்பு (டிசிஜிஐ) அனுமதி வழங்கி இருந்தது.   

ஆனால், இங்கிலாந்தில் இந்த தடுப்பூசி செலுத்திய நபருக்கு பக்க விளைவு ஏற்பட்டதால் பரிசோதனை பணிகள் நிறுத்தி வைக்கப்பட்டது. இதனால், இந்தியாவில் பரிசோதனையில் இருந்த ஆக்ஸ்போர்டு தடுப்பூசியின் பரிசோதனையை நிறுத்தி வைக்க சீரம் இன்ஸ்டிடியூட்டிற்கு இந்திய மருந்து கட்டுப்பாட்டு அமைப்பு (டிசிஜிஐ) உத்தரவிட்டது. இதனால் இந்தியாவில்
ஆக்ஸ்போர்டு தடுப்பூசியின் பரிசோதனை நிறுத்திவைக்கப்பட்டது.

இந்நிலையில், ஆக்ஸ்போர்டு தடுப்பூசியின் பாதுகாப்பு தொடர்பான ஆய்வை இங்கிலாந்து சுகாதார ஒழுங்குமுறை ஆணையம் மேற்கொண்டது. இந்த ஆய்வின் முடிவில் ஆக்ஸ்போர்டு தடுப்பூசி பரிசோதனை செய்ய பாதுகாப்பானது என தெரியவந்தது. 

இதனால், ஆக்ஸ்போர்டு தடுப்பூசிக்கு விதிக்கப்பட்டிருந்த தடையை இங்கிலாந்து அரசு நீக்கியது. தடை நீக்கத்தை தொடர்ந்து, இங்கிலாந்தில் ஆக்ஸ்போர்டு தடுப்பூசியின் பரிசோதனை உடனடியாக மீண்டும் தொடங்கப்பட்டுள்ளதாக அஸ்ட்ரா ஜெனேகா நிறுவனம் அறிவித்துள்ளது.

இங்கிலாந்தில் ஆக்ஸ்போர்டு தடுப்பூசிக்கான தடை நீக்கப்பட்ட போதிலும் இந்தியாவில் ’கோவிஷீல்டு’ என்று பெயரிடப்பட்டுள்ள இந்த தடுப்பூசி பரிசோதனைக்கு விதிக்கப்பட்ட தடை தற்போதுவரை தொடர்ந்து கொண்டுதான் உள்ளது.

ஆனால், தற்போது ஆக்ஸ்போர்டு தடுப்பூசி பரிசோதனைக்கு விதிக்கப்பட்டிருந்த தடையை இங்கிலாந்து நீக்கியுள்ளதையடுத்து, இந்தியாவில் இந்த ஆக்ஸ்போர்டு தடுப்பூசியின் பரிசோதனையை 
மீண்டும் தொடங்க இந்திய மருந்து கட்டுப்பாட்டு அமைப்பு (டிசிஜிஐ) அனுமதி வழங்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்திய மருந்து கட்டுப்பாட்டு அமைப்பு அனுமதி வழங்கும் பட்சத்தில் உடனடியாக ‘கோவிஷீல்டு’ தடுப்பூசி பரிசோதனையை இந்தியாவிம் மீண்டும் தொடங்குவோம் என சீரம் இன்ஸ்டிடியூட் ஆப்
இந்தியா தெரிவித்துள்ளது.

ஆக்ஸ்போர்டு தடுப்பூசியின் 2 மற்றும் 3-ம் கட்ட பரிசோதனைக்காக நாடு முழுவதும் மொத்தம் 17 இடங்கள் ஏற்கனவே தேர்வு செய்யப்பட்டுள்ளன. மேலும், இந்த பரிசோதனைக்காக 18 முதல் 55 வயதுக்கு இடைப்பட்ட 1,600 தன்னார்வலர்கள் ஏற்கனவே தேர்வு செய்யப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Tags:    

Similar News