செய்திகள்
காணாமல் போன 5 இந்தியர்கள்

காணாமல் போன அருணாச்சல பிரதேச இளைஞர்களை ஒப்படைத்தது சீனா

Published On 2020-09-12 08:43 GMT   |   Update On 2020-09-12 08:43 GMT
அருணாச்சல பிரதேசத்தில் காணாமல் போன 5 இந்தியர்களை ராணுவத்திடம் சீனா ஒப்படைத்தது. இந்த ஒப்படைப்பு சம்பவம் சீன பகுதியில் நடைபெற்றது.
புதுடெல்லி: 

அருணாச்சல பிரதேசத்தின் சுபன்சிரி மாவட்டத்தில் உள்ள வனப்பகுதிக்கு சென்ற 5 இளைஞர்கள் கடந்த வாரம் காணாமல் போனார்கள். இவர்கள் அனைவரும் தகின் இனத்தை சேர்ந்தவர்கள். இவர்கள் அனைவரையும் சீன ராணுவ வீரர்கள் கடத்திச் சென்றுவிட்டதாக வனத்திலிருந்து தப்பியவர்கள் தகவல் கொடுத்தனர். அவர்களை சீன ராணுவம் கடத்தியதாக கிழக்கு அருணாச்சல பிரதேச எம்.பி. தபீன்கான் குற்றம்சாட்டிய நிலையில், 5 பேரும் எல்லைத் தாண்டி வந்ததாக சீன ராணுவம் கூறியிருந்தது.

இதுதொடர்பாக இந்திய ராணுவத்திடம் புகார் கொடுக்கப்பட்டது. அருணாச்சல பிரதேசமும் தங்களது தெற்கு திபெத் என சீன ராணுவம் கூறியது. இதற்கு இந்தியா கடும் கண்டனம் தெரிவித்தது.

இந்த நிலையில் 5 இந்தியர்களும் தங்கள் வசம் இருப்பதாக சீன ராணுவம் தெரிவித்திருந்தது. மேலும் அவர்கள் 5 பேரையும் இன்று ஒப்படைப்பதாகவும் கூறியிருந்தது. அதன்படி அவர்களை சீன பகுதியில் இந்திய ராணுவத்திடம் ஒப்படைத்தது. அவர்கள் கிபிது எல்லை சோதனை சாவடி வழியாக அருணாச்சல பிரதேசத்திற்கு அழைத்து வரப்பட்டனர்.

எனினும் கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளின்படி அவர்கள் 14 நாட்கள் தனிமைப்படுத்தப்பட்டு அதன்பிறகே குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப்படுவார்கள் என ராணுவ செய்தி தொடர்பாளர் தெரிவித்தார்.
Tags:    

Similar News