செய்திகள்
எடியூரப்பா குமாரசாமி

எடியூரப்பாவுடன் குமாரசாமி சந்திப்பு: கர்நாடக அரசியலில் ‘திடீர்’ பரபரப்பு

Published On 2020-09-12 02:48 GMT   |   Update On 2020-09-12 02:48 GMT
பெங்களூரு கிருஷ்ணா இல்லத்தில் முதல்-மந்திரி எடியூரப்பாவை குமாரசாமி சந்தித்து அரை மணி நேரம் தனியாக பேசினார். இது கர்நாடக அரசியலில் திடீர் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. பல்வேறு யூகங்களுக்கும் வழிவகுத்து உள்ளது.
பெங்களூரு :

கர்நாடக சட்டசபைக்கு கடந்த 2018-ம் ஆண்டு தேர்தல் நடைபெற்றது.

இதில் எந்த கட்சிக்கும் தனி மெஜாரிட்டி கிடைக்காததால், காங்கிரஸ்-ஜனதா தளம்(எஸ்) கட்சிகள் கூட்டணி அமைத்தன. குமாரசாமி முதல்-மந்திரியாக பதவி ஏற்றார். 14 மாதங்களுக்கு பிறகு கூட்டணி கட்சிகளின் 17 எம்.எல்.ஏ.க்கள் பதவியை ராஜினாமா செய்ததால், குமாரசாமி அரசு கவிழ்ந்தது. அதன் பிறகு கடந்த 2019-ம் ஆண்டு பா.ஜனதா ஆட்சிக்கு வந்தது. எடியூரப்பா முதல்-மந்திரியாக பதவி ஏற்றார். அவர் ஆட்சி பொறுப்புக்கு வந்து ஒரு ஆண்டு நிறைவடைந்துவிட்டது.

குமாரசாமி தனது ஆட்சியை பறிகொடுத்தாலும், எடியூரப்பா அரசை கவிழ்க்க முயற்சி செய்ய மாட்டேன் என்று கூறி வருகிறார். மேலும் அவர் அரசின் குறைகளை பெரிதாக எதையும் சுட்டிக்காட்டவில்லை. எடியூரப்பாவுக்கு வயதாகிவிட்டதால் அவரை மாற்றிவிட்டு வேறு ஒருவரை முதல்-மந்திரி நாற்காலியில் அமர வைக்க பா.ஜனதா மேலிடம் முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது. தற்போது துணை முதல்-மந்திரியாக உள்ள லட்சுமண் சவதிக்கு முதல்-மந்திரி பதவி கிடைக்கும் என்று தகவல் வெளியானது. அதை அவர் மறுத்தார்.

இந்த நிலையில் லிங்காயத் சமூகத்தின் முக்கிய தலைவராக கருதப்படும் தொழில்துறை மந்திரி ஜெகதீஷ்ஷெட்டர் திடீரென டெல்லி சென்றுள்ளார். அவர் கட்சி மேலிட தலைவர்களை சந்தித்து பேசியுள்ளார். அவரது இந்த டெல்லி பயணம் கர்நாடகத்தில் ஆட்சி தலைமை மாற்றத்திற்கு வழிவகுக்குமோ என்ற கேள்வி எழுந்துள்ளது. அவர் ஏற்கனவே முதல்-மந்திரியாக பணியாற்றியவர். இந்த சூழ்நிலையில் முதல்-மந்திரி எடியூரப்பாவை பெங்களூருவில் உள்ள கிருஷ்ணா இல்லத்தில் முன்னாள் முதல்-மந்திரியும், ஜனதா தளம்(எஸ்) சட்டமன்ற கட்சி தலைவருமான குமாரசாமி நேரில் சந்தித்து பேசினார். அதாவது ஆட்சியை பறிகொடுத்துவிட்டு ஒரு ஆண்டுக்கு பிறகு முதல் முறையாக எடியூரப்பாவை அவர் சந்தித்தார்.

இருவரும் சுமார் 30 நிமிடங்கள் பேசினர். இந்த பேச்சுவார்த்தையின்போது, முதல்-மந்திரியின் தனி செயலாளர்கள் மற்றும் உதவியாளர்கள் அனைவரும் வெளியே அனுப்பப்பட்டனர். அவர்கள் மட்டும் தனியாக ஆலோசனை நடத்தினர். இதில் அரசியல் இருக்கலாம் என்று சொல்லப்படுகிறது. இந்த சந்திப்புக்கு பிறகு குமாரசாமி நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-

கர்நாடகத்தில் நல்ல மழை பெய்து வருகிறது. பெங்களூரு தாசரஹள்ளி தொகுதியில் அதிக மழை பெய்து பாதிப்புகள் ஏற்பட்டுள்ளன. இது தொடர்பாக முதல்-மந்திரியை நேரில் சந்தித்து பேசினேன். அங்கு பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு உதவிகள் செய்ய நிதி ஒதுக்குமாறு கேட்டுக் கொண்டேன். நான் முதல்-மந்திரியாக இருந்தபோது அந்த தொகுதிக்கு நிதி ஒதுக்கினேன். அதை நிறுத்தி வைத்துள்ளனர். அந்த நிதியை விடுவிக்குமாறு முதல்-மந்திரியை கேட்டுக் கொண்டேன். அவரும் சாதகமான பதில் கூறியுள்ளார்.

எம்.எல்.ஏ.க்களின் தொகுதிகளுக்கு ஒதுக்கப்படும் நிதியிலும் பாரபட்சம் காட்டப்படுகிறது என்று முதல்-மந்திரியிடம் தெரிவித்தேன். கொரோனா வைரசை தடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்து சில ஆலோசனைகளை கூறினேன். இந்த சந்திப்பில் அரசியல் நோக்கம் எதுவும் இல்லை.

இவ்வாறு குமாரசாமி கூறினார்.
Tags:    

Similar News