செய்திகள்
பா.ஜனதா

ஜனாதிபதி தேர்தலில் பா.ஜனதாவின் பெயரை பயன்படுத்த வேண்டாம் - அமெரிக்க தொண்டர்களுக்கு கட்சி அறிவுரை

Published On 2020-09-11 01:00 GMT   |   Update On 2020-09-11 01:00 GMT
அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் பா.ஜனதாவின் பெயரை பயன்படுத்த வேண்டாம் என பா.ஜனதா தொண்டர்களுக்கு கட்சி அறிவுறுத்தி உள்ளது.
புதுடெல்லி:

அமெரிக்காவில் நவம்பர் மாதம் ஜனாதிபதி தேர்தல் நடக்கிறது. இதில் குடியரசு கட்சி சார்பில் தற்போதைய ஜனாதிபதி டிரம்பும், ஜனநாயக கட்சி சார்பில் முன்னாள் துணை ஜனாதிபதி ஜே பைடனும் போட்டியிடுகிறார்கள்.

இந்த இரு கட்சிகளும் அங்கு வாழும் இந்தியர்களின் ஆதரவை பெற தீவிரம் காட்டி வருகின்றன. இதில் குடியரசு கட்சி பிரசார கூட்டங்களில், பிரதமர் மோடியும், டிரம்பும் இந்தியா மற்றும் அமெரிக்காவில் சந்தித்துக்கொண்ட நிகழ்வுகளின் படங்கள் பயன்படுத்தப்படுகின்றன.

இந்த நிலையில் ஜனாதிபதி தேர்தலில் பா.ஜனதாவின் பெயரை பயன்படுத்த வேண்டாம் என அங்குள்ள பா.ஜனதா தொண்டர்களுக்கு கட்சி அறிவுறுத்தி உள்ளது. இது குறித்து கட்சியின் வெளிநாட்டு உறவுகள் துறை தலைவர் விஜய் சவுதைவாலே பி.டி.ஐ. செய்தி நிறுவனத்துக்கு அளித்த பேட்டியில், ‘எந்த தேர்தல் நடைமுறையும் ஒரு நாட்டின் உள்நாட்டு விவகாரம் ஆகும். அதில் எந்தவகையிலும் பா.ஜனதாவின் பங்களிப்பு இல்லை’ என்று தெரிவித்தார்.

அந்தவகையில், பா.ஜனதாவின் அமெரிக்க தொண்டர்கள் ஜனாதிபதி தேர்தலில் எந்த கட்சியையோ அல்லது நபரையோ ஆதரித்து நடைபெறும் பிரசாரங்களில் தனிப்பட்ட முறையில் பங்கேற்கலாம் எனவும், ஆனால் பா.ஜனதாவையோ அல்லது கட்சியின் வெளிநாட்டு பிரிவின் பெயரையோ பயன்படுத்த வேண்டாம் எனவும் அறிவுறுத்தி இருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.
Tags:    

Similar News