செய்திகள்
சுப்ரீம் கோர்ட்

மறுதேர்வை ரத்து செய்யக்கோரி வழக்கு- சிபிஎஸ்இ பிரமாண பத்திரம் தாக்கல் செய்ய உச்ச நீதிமன்றம் உத்தரவு

Published On 2020-09-04 08:41 GMT   |   Update On 2020-09-04 08:41 GMT
மறுதேர்வை ரத்து செய்யக்கோரி தொடரப்பட்ட வழக்கில் பிரமாண பத்திரம் தாக்கல் செய்யும்படி சிபிஎஸ்இ-க்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
புதுடெல்லி:

சிபிஎஸ்இ 10ம் வகுப்பு மற்றும் 12ம் வகுப்பு பொதுத்தேர்வில் தேர்ச்சி பெறாத மற்றும் அதிக மதிப்பெண் பெறுவதற்கு முயற்சிக்கும் மாணவர்களுக்கான மறுத்தேர்வை ரத்து செய்ய உத்தரவிடக்கோரி மாணவர்கள் சார்பில் உச்ச நீதிமன்றத்தில் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. இந்த வழக்கு நீதிபதி கான்வில்கர் தலைமையிலான அமர்வில் இன்று விசாரணைக்கு வந்தது.

அப்போது, சிபிஎஸ்இ சார்பில் ஆஜரான வழக்கறிஞர் ரூபேஷ் குமார், மறுதேர்வு செப்டம்பர் மாதம் நடத்தப்படலாம் என்றும், மாணவர்களுக்கு தேவையான அனைத்து முன்னெச்சரிக்கை ஏற்பாடுகளும் செய்யப்படும் என்றும் கூறினார்.

கடந்த ஆண்டு 575 மையங்களில் தேர்வு நடைபெற்ற நிலையில், இந்த முறை 1278 மையங்கள் ஏற்பாடு செய்யப்பட்டிருப்பதாகவும், ஒரு வகுப்பறையில் 12 மாணவர்கள் மட்டுமே அமர்ந்து தேர்வு எழுத ஏற்பாடு செய்யப்பட்டிருப்பதாகவும் தெரிவித்தார்.

இந்த வாதத்தை கேட்ட நீதிபதிகள், மறுதேர்வு நடத்தும் விவகாரத்தில் வரும் 7-ம் தேதிக்குள் பிரமாண பத்திரம் தாக்கல் செய்யும்படி சிபிஎஸ்இ-க்கு உத்தரவிட்டனர். வழக்கின் அடுத்தகட்ட விசாரணையை 10ம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.

சிபிஎஸ்இ மறுதேர்வு நடைபெற்றால் 10ம் வகுப்பில் 1.5 லட்சம் மாணவர்களும், 12ம் வகுப்பில் 87 ஆயிரம் மாணவர்களும் தேர்வு எழுதுவார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
Tags:    

Similar News