செய்திகள்
இந்திய ராணுவ வீரர்கள்

சீனா, பாகிஸ்தான் பங்கேற்கும் கூட்டு ராணுவ பயிற்சியை புறக்கணிக்க இந்தியா முடிவு

Published On 2020-08-30 08:40 GMT   |   Update On 2020-08-30 08:40 GMT
ரஷியாவில் அடுத்த மாதம் சீனா, பாகிஸ்தான் உள்ளிட்ட நாடுகள் பங்கேற்கும் கூட்டு ராணுவப் பயிற்சியைப் புறக்கணிப்பதற்கு இந்தியா முடிவெடுத்துள்ளது.
புதுடெல்லி:

ரஷியாவின் அஸ்ட்ராகான் மாகாணத்தில், செப்டம்பர் 15-ஆம் தேதி முதல் 26-ஆம் தேதி வரை கூட்டு ராணுவப் பயிற்சி நடைபெறவுள்ளது. அதில், ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் உறுப்பு நாடுகளான இந்தியா, சீனா, பாகிஸ்தான் உள்பட 20 நாடுகள் பங்கேற்க திட்டமிடப்பட்டிருந்தது. ரஷியாவின் அழைப்பை ஏற்று இந்த கூட்டு ராணுவப் பயிற்சிக்கு வீரர்களை அனுப்ப இந்தியா முடிவு செய்திருந்தது. 

இந்த நிலையில், இந்த ஆண்டுக்கான கூட்டு ராணுவப் பயிற்சியில் பங்கேற்கப் போவதில்லை என்று இந்தியா முடிவு செய்துள்ளது. இந்த தகவலை வெளியிட்ட பாதுகாப்புத்துறை அமைச்சகம், கொரோனா அச்சுறுத்தல் மற்றும் அடுத்தடுத்த தொடர்ச்சியான கடினமான சூழலால் இதில் பங்கேற்க முடியாத சூழல் இருப்பதாக தெரிவித்துள்ளது.

ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் பாதுகாப்புத் துறை அமைச்சர்கள் மாநாடு, ரஷியாவில் அடுத்த வாரம் நடைபெறவுள்ளது. அதில் பங்கேற்க பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் அடுத்த வாரம் ரஷியா செல்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
Tags:    

Similar News