செய்திகள்
நீட் தேர்வு

நீட், ஜேஇஇ தேர்வுகள்: டுவிட்டரில் கவலைகளை பகிர்ந்த மாணவர்கள்

Published On 2020-08-28 22:19 GMT   |   Update On 2020-08-28 22:19 GMT
கொரோனா சூழலில் நீட் மற்றும் ஜே.இ.இ. தேர்வுகள் நடத்தப்படுவதால் அது குறித்த கவலைகளை மாணவர்கள் சமூக வலைத்தளங்களில் பகிர்ந்து வருகின்றனர்.
புதுடெல்லி:

கொரோனா தீவிரத்தின் மத்தியிலும் நீட் மற்றும் ஜே.இ.இ. நுழைவுத்தேர்வுகளை திட்டமிட்டபடி அடுத்த மாதம் நடத்த மத்திய அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. இதை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில் நேற்றும் வழக்கு தொடரப்பட்டு உள்ளது.

இந்த நிலையில் கொரோனா சூழலில் இந்த தேர்வு நடத்தப்படுவதால் அது குறித்த கவலைகளை மாணவர்கள் சமூக வலைத்தளங்களில் பகிர்ந்து வருகின்றனர். அந்தவகையில் டுவிட்டர் தளத்தில் நேற்று காலை முதல் 25 லட்சத்துக்கும் அதிகமான பதிவுகள் பகிரப்பட்டு இந்த விவகாரம் நாள் முழுவதும் டிரெண்டிங்கில் இருந்தது.

இதற்காக, ‘மாணவர்களின் பாதுகாப்புக்காக பேசுங்கள்’ என்ற ஹாஷ்டாக்கை அவர்கள் உருவாக்கி இருந்தனர். அதில் ஒரு மாணவர் கூறும்போது, ‘கொரோனா பாதிப்பு 500: முழு ஊரடங்கு. 75 ஆயிரம்: மாணவர்கள் தேர்வு எழுத கட்டாயப்படுத்தல்’ என்று குறிப்பிட்டு இருந்தார்.

இதைப்போல மற்றொரு தேர்வரோ, ‘இந்த விவகாரத்தில் அரசு எங்களுக்கு உதவவில்லை. எங்களை சாவின் விளிம்புக்கு தள்ளிவிட்டனர். எனவே இந்த விவகாரத்தில் ஜனாதிபதி தலையிட்டு எங்களுக்கு உதவ வேண்டும். தயவு செய்து உதவுங்கள் ஐயா’ என்று கூறியுள்ளார்.

இதில் பெரும்பாலான மாணவர்கள் தேர்வு மையம் அருகில் இல்லாமை உள்ளிட்ட வசதிகள் குறைவு குறித்து தங்கள் கவலைகளை பகிர்ந்திருந்த நிலையில், மீதமுள்ள மாணவர்கள் தற்போதைய உளவியல் நெருக்கடியில் இந்த தேர்வுகளை எழுத முடியாது என வருத்தம் தெரிவித்து இருந்தனர்.
Tags:    

Similar News