செய்திகள்
சித்தராமையா, எடியூரப்பா

டி.ஜே.ஹள்ளி வன்முறைக்கு அரசு, உளவுப்பிரிவு போலீசாரின் தோல்வியே காரணம்: சித்தராமையா

Published On 2020-08-20 03:35 GMT   |   Update On 2020-08-20 03:35 GMT
டி.ஜே.ஹள்ளி வன்முறைக்கு காங்கிரஸ் மீது குற்றச்சாட்டு கூறுவது சரியல்ல என்றும், அரசு மற்றும் உளவுப்பிரிவு போலீசாரின் தோல்வியே வன்முறைக்கு காரணம் என்றும் கூறி முதல்-மந்திரி எடியூரப்பாவுக்கு எழுதியுள்ள கடிதத்தில் சித்தராமையா தெரிவித்துள்ளார்.
பெங்களூரு :

பெங்களூரு டி.ஜே.ஹள்ளி மற்றும் கே.ஜி.ஹள்ளியில் நடந்த வன்முறைக்கு காங்கிரஸ் கட்சியே காரணம் என்று மந்திரிகள் குற்றச்சாட்டு கூறி வருகிறார்கள். இந்த நிலையில், வன்முறைக்கு அரசு மற்றும் உளவுப்பிரிவு போலீசாரின் தோல்வியே காரணம் எனக்கூறி எதிர்க்கட்சி தலைவர் சித்தராமையா குற்றச்சாட்டு கூறியுள்ளார்.

இதுதொடர்பாக முதல்-மந்திரி எடியூரப்பாவுக்கு வன்முறை தொடர்பாக 13 பிரச்சினைகள் குறித்து கேள்வி எழுப்பி சித்தராமையா கடிதம் எழுதியுள்ளார். அந்த கடிதத்தில் கூறப்பட்டு இருப்பதாவது:-

பெங்களூரு டி.ஜே.ஹள்ளி மற்றும் கே.ஜி.ஹள்ளியில் கடந்த 11-ந் தேதி வன்முறைக்கு அரசின் தோல்வியே முதற்காரணமாகும். வன்முறைக்கு அரசே முழு பொறுப்பு ஏற்க வேண்டும். வன்முறையை தடுக்க தவறிய அரசு எதற்காக ஆட்சி பொறுப்பில் இருக்க வேண்டும். முகநூலில் அவதூறு பரப்பிய பின்பு போலீசார் உடனடியாக வழக்குப்பதிவு செய்திருந்தால், இதுபோன்ற வன்முறை நடந்திருக்காது. நவீனுக்கு பின்னால் யாரோ பெரிய புள்ளிகள் இருக்கிறார்கள். அதுபற்றி விசாரணை நடத்தப்பட வேண்டும். நேர்மையான போலீஸ் அதிகாரிகள் பணி இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். அதனால் வன்முறை சம்பவத்தை தடுக்க முடியாத நிலை உருவாகி இருக்கிறது.

ஒரு எம்.எல்.ஏ.வின் வீடு மற்றும் போலீஸ் நிலையத்தை வன்முறையாளர்களிடம் இருந்து காப்பாற்ற முடியாத அரசு, இந்த மாநில மக்களுக்கு எந்த விதமான பாதுகாப்பை அளிக்கப்போகிறது. வன்முறைக்கு அரசு பொறுப்பு ஏற்பதை விட்டுவிட்டு, வாலிபர்கள் மீது குற்றச்சாட்டு சுமத்துவதும், அரசு சரியான முறையில் செயல்படுவதாக மாநில மக்களிடம் கூறுவதும் எந்த வகையில் நியாயம்?. வன்முறையில் அரசு மற்றும் பொதுமக்களின் சொத்துகளை நாசப்படுத்தியவர்களிடம் இருந்து இழப்பீடு தொகையை வசூலிக்க முடிவு எடுத்திருப்பதை வரவேற்கிறேன். அதே நேரத்தில் இதற்கு முன்பு நடந்த வன்முறைகளிலும் சேதம் அடைந்த பொதுச் சொத்துகளுக்கு, வன்முறையாளர்களிடம் இருந்து இழப்பீடு வசூல் செய்ய வேண்டும்.

ஒரு ஆளும் கட்சி வன்முறை தொடர்பாக விசாரிக்க சத்திய சோதனை கமிட்டியை அமைப்பது இதுவே முதல் முறையாகும். ஏனெனில் போலீசார் விசாரணை நடத்தி வரும் சூழ்நிலையில், ஆளும் கட்சி சார்பில் ஒரு கமிட்டி அமைக்கப்பட்டால், அது விசாரணைக்கு முட்டுக்கட்டை ஏற்படும் என்பது கூட அரசுக்கு தெரியவில்லை. உங்களது அரசு மற்றும் போலீசார் மீது நம்பிக்கை இல்லையா?. போலீஸ் அதிகாரிகள் மீது நம்பிக்கை இல்லையா?. அரசு அதிகாரிகளுக்கு மக்கள் வரிப்பணத்தில் இருந்து சம்பளம், இதர படிகள் கொடுக்க வேண்டிய அவசியம் என்ன?.

எஸ்.டி.பி.ஐ. கட்சியை சேர்ந்த சிலருக்கு வன்முறையில் தொடர்பு இருப்பதாக அரசு கூறி வரும் நிலையில், ஒட்டு மொத்த கட்சியே தடை செய்ய நினைப்பது சரியா?. வன்முறை குறித்து சரியான முறையில் விசாரணை நடத்த வேண்டும். அரசு மற்றும் உளவுப்பிரிவு போலீசாரின் தோல்வியை மூடி மறைப்பதற்காக, வன்முறைக்கு காங்கிரஸ் மீது குற்றச்சாட்டு கூறுவது சரியல்ல. அதனை ஏற்றுக்கொள்ளவும் முடியாது. வன்முறை குறித்து நேர்மையான முறையில் விசாரணை நடத்த ஐகோர்ட்டு நீதிபதி தலைமையில் விசாரணைக்கு அரசு உத்தரவிட வேண்டும்.

இவ்வாறு சித்தராமையா கூறியுள்ளார்.

Tags:    

Similar News